5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்திறனைப் பற்றி ஆராய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு திங்கட்கிழமை அன்று கூடியது. அந்த கூட்டத்தில் சோனியா காந்தி புதிய கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை ஜூன் 23 அன்று நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால் தற்போது கொரோனா காரணமாக காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது.
கடந்த ஒருவருடமாகவே, மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சஷி தரூர் மற்றும் கபில் சிபல் ஆகியோர் "முழுநேர" மற்றும் "செயல்பாடு உடைய தலைமை" வேண்டும் என கூறி வந்தனர். அப்போது தான் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் அவர்கள் கூறி வந்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கட்சியின் செயல்திறன் குறித்து பேசிய சோனியா காந்தி, “பின்னடைவுகளைக் கவனித்து நிலைமையை சரி செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் “கட்சியின் தேர்தல் பின்னடைவுகளுக்கு காரணமான ஒவ்வொரு அம்சத்தையும் சரி செய்ய ஒரு சிறிய குழு அமைக்கப்படும். கேரளா மற்றும் அசாமில் தற்போதுள்ள அரசாங்கங்களை அகற்ற காங்கிரஸ் ஏன் தவறிவிட்டது என்பதையும், மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட படுதோல்விக்கான காரணம் என்ன என்பதையும் நாம் நேர்மையாக புரிந்து கொள்ள வேண்டும், ”என்று காந்தி கூறினார்.
"இவை சங்கடமான படிப்பினைகளைத் தரும், ஆனால் நாம் யதார்த்தத்தை எதிர்கொள்ளாவிட்டால், உண்மைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளாவிட்டால், நம்மால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது," என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாத சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்திறன் "மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு சோனியா காந்தியின் இந்த அறிக்கைகள் வந்துள்ளன. இந்த சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்களை கவர காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடியது.
சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி கேரளா மற்றும் அசாமில் அதிகாரத்தை கைப்பற்றத் தவறியுள்ளது மற்றும் மேற்கு வங்காளத்தில் படுதோல்வியை சந்திந்துள்ளது. மேலும், புதுச்சேரியிலும் ஆட்சியை தக்க வைப்பதில் தோற்றுள்ளது. இந்த தோல்விகளின் காரணங்களை ஆராய்வது, அடுத்ததாக நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களுக்கு காங்கிரஸ் கட்சி தயாராக உதவும்.
மேற்கு வங்காளத்தில், இடதுசாரி மற்றும் ஐ.எஸ்.எஃப் உடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சி ஒரிடத்தில் கூட வெல்ல முடியாததோடு, அந்த கூட்டணியையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு, திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது, பாஜக 77 இடங்களைப் பெற்றுள்ளது.
அசாமில், காங்கிரஸ் போட்டியிட்ட 95 இடங்களில் 29 இடங்களை வென்றது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமைத்த கூட்டணி பாஜகவுக்கு சவால் விடத் தவறியது, ஆளும் கட்சியின் 75 இடங்களுக்கு எதிராக வெறும் 50 இடங்களை வென்றுள்ளது.
கேரளாவில், காங்கிரஸ் தனது பலத்தை நிலைநிறுத்தியுள்ளது, 2016ல் 41 இடங்களை வென்றிருந்த நிலையில் ஒரு இடத்தை மட்டுமே இழந்து 40 இடங்களில் வென்றுள்ளது. இங்கு இடது முன்னணி 99 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
தமிழ்நாட்டில், திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியில் காங்கிரஸ் ஒரு பகுதியாக இருந்தது மற்றும் ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்டுள்ளது, ஒதுக்கப்பட்ட 25 இடங்களில் 18 இடங்களை வென்றுள்ளது. எவ்வாறாயினும், புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக ஜோடி 30 இடங்களில் 16 இடங்களை வென்றதால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரத் தவறியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.