நீட் தேர்வர்களின் பெயர், முகவரி, மெயில் ஐடி அனைத்தும் விற்பனைக்கு! அசர வைக்கும் ஆன்-லைன் மோசடி

NEET Candidates 2018 Data Leaked Online: தனிமனித விபரங்களை பாதுகாக்கும் பொறுப்பினை யார் ஏற்றுக் கொள்வது?

NEET Candidates Data Leaked Online: இணைய தளம் ஒன்று, நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் முழு விபரங்களையும் விலைக்காக வைத்திருக்கிறது.

இந்தியாவில் ஆன்லைன் விளம்பர சேவைகள் மற்றும் தனிமனித ரகசியங்களின் பாதுகாப்பு என இரண்டும் எப்படியாக செயல்படுகிறது என்பதை நாம் இதைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்.

உங்களால் தற்போது இரண்டு லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும் என்றால், இந்த வருடம் நீட் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்களின் முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வருடம் நீட் தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில் 2 லட்சம் மாணவர்களின் முழு விபரங்கள் தற்போது ஆன்லைனில் கிடைக்கின்றது.

உங்களால் இரண்டு லட்சம் தர முடியும் என்றால் இரண்டு லட்சம் மாணவர்களின் முழு விபரங்களையும் குறிப்பிட்ட இணையத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தனியார் ஊடகவியல் நிறுவனம், மூன்று வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அந்த இணையத்தில் லாக்-இன் செய்துள்ளது.

இவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு சாம்பிள் டேட்டாவினை வாட்ஸ்ஆப்பில் ஷேர் செய்துள்ளது அந்த இணைய நிறுவனம்.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த போன் நம்பர்களுக்கு கால் செய்தால், போனை எடுத்தவர்கள், அவர்கள் நீட் தேர்வு எழுதியவர்கள் தான் என்று கூறி, முழு விபரங்களையும் உறுதி செய்தார்கள்.

யாருக்கு இவர்களின் தகவல் தேவைப்படுகிறது? 

தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்களுக்கு இவர்களின் முழு விபரங்களும் தேவைப்படலாம்.

“இந்த வருடம் நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அடுத்த ஆண்டில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி அளிக்கின்றோம், இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறீர்கள் எங்கள் நிறுவனத்தில் கல்வி கற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி மாணவர் சேர்க்கைகளை அதிகப்படுத்த இவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் இந்த டேட்டா.

கிடைத்த சாம்பிள் டேட்டாவினை பயன்படுத்தி மாணவர்களுக்கு போன் செய்த போது “ஆமாம் எனக்கு ஒரு பயிற்சி பள்ளியில் இருந்து போன் வந்தது” என்று கூறினார்.

மற்றொரு மாணவர் குறிப்பிடுகையில் “கடந்த ஒரு மாதமாக தினமும் நாளொன்றுக்கு சுமார் ஐந்து போன்களாவது வருகின்றது. இதில் சேர்ந்து கொள், அதில் சேர்ந்து கொள் என்று. நான் நீட்டில் வெற்றி பெற்றுவிட்டேன். நான் ஏன் மற்ற நிறுவனங்களில் படிக்க செல்ல வேண்டும் என்று” கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்படி இது சரியா தவறா?

ஐடி ஆக்ட் 43A மற்றும் 72A சட்டங்கள் இது போன்ற டேட்டா லீக்கேஜ்களை தடைசெய்ய உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டங்களை இதுவரைக்கும் பயன்படுத்தி யாருக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் காலையன்று, நரேந்திர மோடிக்கு மாணவி எழுதிய கடிதத்தினை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார் மோடி.

இக்கடிதத்திற்கு நன்றி கூறிய மோடி, அப்பெண்ணின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை மறைக்க மறந்துவிட்டார். தனிப்பட்ட விசயங்கள் என்றால் அது அனைவருக்கும் பொருந்தும். இதுவும் ஒரு வகையில் டேட்டா லீக்கேஜ் தான்.

இந்த டேட்டா லீக்கேஜினை ஏற்படுத்தியது தொடர்பாக விவாதங்கள் நடைபெறுமா, அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close