நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ராஜ்யசபாவில் பிரச்னையை கிளப்பினர். அது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால்,அமளி ஏற்பட்டு ராஜ்யசபா முடங்கியது.
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழக அரசு சார்பில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் ஆணைக்கு தடை விதித்தது.
தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியுமா? எந்த அடிப்படையில் அரசு கவுன்சிலிங் நடத்தப் போகிறது என்ற விபரம் தெரியாமல், மாணவர்கள் தவித்து வருகிறார்கள். மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் இந்த மருத்துவ படிப்பு தொடர்பான குழப்பம் நீடித்து வருகிறது.
நீட் தேர்வு விவகாரத்தை தமிழக சட்டசபையில் திமுக எழுப்பியது. ஆனால் அமைச்சர் அளித்த பதில் திருப்தி தரவில்லை என்று கூறி, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது.
இந்த விவகாரம் ராஜ்யசபாவை முடக்கியது. ராஜ்யசபாவில், நேரமில்லா நேரத்தில் இந்த விவகாரத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி எழுப்பினார். ‘நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கேட்டார். ஆனால் நீட் தேர்வு குறித்து தொடர்ந்து பேச அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
அவருக்கு ஆதரவாக, அதிமுக ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். திமுக உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் நீட் தேர்வு விவகாரத்தில் ஓரணியில் நின்று போராடியதால், ராஜ்யசபா அலுவல்கள் சுமார் அரை மணி நேரம் முடங்கியது.