தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET UG) ரூ.7 லட்சத்துக்கு ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை டெல்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பணம் வாங்கிக் கொண்டு தங்கள் அடையாளத்தை மறைக்கும் நீட் தேர்வர்களுக்காக தேர்வு எழுதியதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) இரண்டாம் ஆண்டு படித்து வரும் நரேஷ் பிஷ்ரோய் இந்த கும்பலின் தலைவன் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நரேஷ் பிஷ்ரோய் பணம் தருவதாகக் கூறி எய்ம்ஸ் நிறுவனத்தில் பல மாணவர்களை கும்பலில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. நரேஷ் பிஷ்ரோய் 7 லட்சம் கொடுத்த நீட் தேர்வர்களுக்குப் பதிலாக முதலாம் ஆண்டு மாணவர்களை நாடு முழுவதும் நீட் தேர்வு எழுத வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: டெல்லி கலவரம் எதிரொலி: துணை ராணுவத்துக்கு புதிய பாதுகாப்பு சீருடை வழங்க முடிவு
நரேஷ் பிஷ்ரோய் உடன் சஞ்சு யாதவ், மகாவீர் மற்றும் ஜிதேந்திரா ஆகிய நான்கு பேரை டெல்லி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கதிரியக்கவியல் முதலாம் ஆண்டு மாணவரான சஞ்சு யாதவ், பணம் கொடுத்தவருக்காக நீட் தேர்வு எழுதும் போது சிக்கினார். மகாவீர் மற்றும் ஜிதேந்திரா ஆகியோரும் டெல்லி எய்ம்ஸ் மாணவர்கள் தான், இவர்கள் நாக்பூரில் இருந்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களது செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணையின் போது, ஆள்மாறாட்டம் செய்ய நீட் தேர்வாளர்களிடம் இருந்து செய்ய ரூ.7 லட்சத்தை நரேஷ் பிஷ்ரோய் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடியில் மேலும் மாணவர்கள் யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil