நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்றுவது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.
இதனை பாஜக அரசு பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என மாற்றியுள்ளது. இது தொடர்பாக இன்று பதிலளித்த ராகுல் காந்தி, “நேரு தனது பணியால் (கரம்) அறியப்பட்டவர்” என்றார்.
இந்த அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் இந்த நடவடிக்கையை "குறுகிய" அரசியல் என்றும் ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என்றும் குற்றம் சாட்டி வருகின்றன.
இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “இன்றுவரை அனைத்து பிரதமர்களுக்கும் மரியாதை அளித்து வருகிறோம்” என்றார்.
இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில், “நேருவின் பாரம்பரியத்தை மறுப்பது, சிதைப்பது, அவதூறு செய்வது மற்றும் அழிப்பது என்ற ஒற்றைப் போக்கை கொண்டுள்ளனர்.
N ஐ அழித்துவிட்டு P ஐ போட்டுள்ளார். அந்த P உண்மையில் அற்பத்தனம் மற்றும் கோபத்திற்கானது (pettiness and peeve) எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜூன் 15 அன்று நடந்த என்எம்எம்எல் சொசைட்டி சிறப்புக் கூட்டத்தில் நேருவின் பெயரை மறுபெயரிடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த என்எம்எம்எல் சொசைட்டியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், ஜி கிஷன் ரெட்டி, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட 29 உறுப்பினர்களும் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“