குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் இரவோடு இரவாக கூட்டம் கூட்டமாக அம்மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றன.
கடந்த சில மாதங்களாக குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பொது இடங்களில் வைத்து இவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வீடியோக்களாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, குஜராத் மாநிலம் சபர்கண்டா மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அகமதாபாத், பதான், சபர்கந்தா, மேசானா போன்ற மாவட்டங்களில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் பின்பு போராட்டங்கள் தாக்குதல் வரை சென்றன. பல இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில், இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா கூறுகையில்,’14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காரணத்தினால், வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிகரித்து வருகிறது.
ஒருவர் தவறு செய்த காரணத்தினால், ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தவறானவர்கள் என்று எண்ணுவது தவறு. தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதல்களில் தாகூர் சேனா அமைப்பினர் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்தனர்.