புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பணம் மதிப்பிழக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், புதிய வடிவில் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், நேற்று புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. லாவண்டர் நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த நோட்டின் பின் பக்கத்தில், குஜராத் மாநிலம் பதானில் உள்ள 'ராணி கி வாவ்' எனும் புராதான கிணறு இடம் பெற்றுள்ளது. யுனெஸ்கோவின் உலக புராதான சின்னங்களின் பட்டியலில் ராணி கி வாவ் கிணறும் இடம் பெற்றுள்ளது.
புதிய 100 ரூபாய் தாள் வெளியானாலும் பழைய 100 ரூபாய் தாள்கள் பயன்பாட்டில் இருக்கும் எனவும், ஏ.டி.எமில் பழைய 100 ரூபாய்க்கு மாற்றாக புதிய 100 ரூபாய் தாள்கள் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய 100 ரூபாய் நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி, ‘இந்த புதிய நோட்டு, ஊதா நிறத்தில் இருக்கும். 66 மில்லி மீட்டருக்கு 142 மில்லி மீட்டருக்கு இதன் வடிவமைப்பு அளவு இருக்கும். இதற்கு முன்னர் ரிசர்வ் வங்கி மூலம் புழக்கத்தில் விடப்பட்டுள்ள அனைத்து வித 100 ரூபாய் நோட்டுகளும் செல்லும். இந்த புதிய 100 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கூடிய விரைவில் அதிகரிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.