ஜார்கண்டில் இளம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக முன்பு கூறப்பட்டு, பிறகு ஆண் குழந்தை பிறந்ததால், அதன் பிறப்புறுப்பை துண்டித்து பெண் குழந்தையாகக் காட்ட செய்த முயற்சியில் அக்குழந்தை பரிதாபமாக பலியானது.
ஜார்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அனில் பாண்டா. இவருடைய மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, அப்பகுதியில் உள்ள அருண் குமார் என்ற மருத்துவரின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்பெண்ணை பரிசோதித்த அருண் குமார், அனுஜ் குமார் என்பவரின் மருத்துமவனைக்கு அழைத்துச் செல்லும்படி பாண்டாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மனைவியை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பாண்டா அனுமதித்தார். அங்கு அந்தப் பெண்ணை பரிசோதித்த அனுஞ் குமார், அவருக்குக் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் ‘அல்ட்ராசவுண்ட்’ பரிசோதனையைச் சட்ட விரோதமாக நடத்தினார். அதன் முடிவைப் பார்த்து, பெண் குழந்தை பிறக்கப் போவதாக கூறினார். அடுத்த சில மணி நேரங்களில் அந்தப் பெண்ணுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் பார்த்த நர்சுகள் இதைப் பெண்ணிடமும், பாண்டாவின் தாயிடமும் கூறினர். வெளியில் சென்றிருந்த பாண்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவல் கூறப்பட்டது. இதனால், குழந்தையைப் பார்ப்பதற்காக ஆர்வத்துடன் அவர் மருத்துவமனைக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனையில் தனது தாயாரும் மனைவியும் அழுது கொண்டிருப்பதை கண்டு குழப்பம் அடைந்தார்.
தனது குழந்தையை பார்த்த போது அதன் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டா, போலீசில் புகார் அளித்தார். அதில், பெண் குழந்தை பிறக்கப் போவதாக தான் கூறியதை உண்மையாக்குவதற்காக, ஆண் குழந்தையின் பிறுப்புறுப்பை அனுஜ் குமார் துண்டித்து விட்டது தெரிய வந்தது.
போலீஸ் வரும் முன்பாக அருண் குமாரும், அனுஜ் குமாரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் இருவரும் போலி மருத்துவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. நீண்ட காலமாக அப்பகுதியில் இவர்கள் சட்ட விரோதமாக மருத்துவமனையை நடத்தி வந்துள்ளனர். இவர்களின் மருத்துவமனைக்கு மாவட்ட தலைமை மருத்துவர் எஸ்.பி.சிங் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். தலைமறைவான இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.