சீனாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக கின் கேங் (Qin Gang) கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனைகள் குறித்து அவர் பேசினார். அப்போது இரு தரப்பும் நிலைமையை எளிதாக்க தயாராக உள்ளன, அமைதியை பேணவும் தயாராக உள்ளன என்று தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கான சீனாவின் தூதராக இருந்த கின், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். நீண்ட காலமாக அப்பதவியில் இருந்த வாங்கிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டார். கின் இதற்கு முன்பு 2014 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.
டிசம்பர் 26-ம் தேதியன்று அமெரிக்க இதழான நேஷனல் இன்ட்ரஸ்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரையில், இந்தியா-சீனா உறவு,எல்லை பிரச்சனை பற்றி கின் குறிப்பிட்டுள்ளார். தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் செயல் மற்றும் தென் சீனக் கடலில் உள்ள நிலையை மாற்றியதற்காக ஜப்பான் மீதும் அவர் குற்றம் சாட்டினார். கின்யின் கட்டுரை டெல்லியில் உள்ள சீன தூதரகத்தால் சரிபார்க்கப்பட்டது.
சீனாவின் வளர்ச்சி என்பது அமைதிக்கான வலுவான சக்தியாகும். தைவான் ஜலசந்தி பகுதியில் பதற்றம் சீனாவில் உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக தைவான் சுதந்திர பிரிவினைவாதிகள் மற்றும் வெளிப்புற சக்திகளால் ஒரே சீனா என்ற நிலையை தொடர்ந்து எதிர்ப்பதால் வந்தது எனக் கூறினார்.
கிழக்கு சீனக் கடல் பகுதியைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் தான் டியாயு டாவோவை 'தேசியமயமாக்க' முயற்சித்தது. சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க ஒப்புக்கொண்ட "நிலையை" மாற்றியது. தென் சீனக் கடலில், பிராந்தியத்திற்கான அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள விதிகளுக்கு வழிவகுக்கும் நடத்தை நெறிமுறை குறித்து பிராந்திய நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, இரு தரப்பினரும் நிலைமையை எளிதாக்குவதற்கும், தங்கள் எல்லைகளில் அமைதியை பாதுகாக்க தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.
அக்டோபரில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20-வது தேசிய காங்கிரஸ் கூட்டத்தில், உலக அமைதியை நிலைநிறுத்துவதற்கும், பொதுவான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் சீனா தனது வெளியுறவுக் கொள்கை இலக்குகளுக்கு உறுதிபூண்டுள்ளது. சீனாவின் இத்தகைய அதிகாரப்பூர்வமான, வெளிப்படையான அறிவிப்பு சீனா உலகத்துடன் ஈடுபடும் விதத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சீனா-அமெரிக்க உறவுகள் குறித்து பேசுகையில், "மக்கள் தங்கள் உலகை ஜனநாயகம் vs சர்வாதிகாரம் கண்ணோட்டத்தில் பார்க்கத் தேர்வுசெய்தால், பிளவு, போட்டி மற்றும் மோதல்கள் நிறைந்த உலகம் உருவாகும். மாறாக ஒரே சமூகமாக பார்த்தால், திறந்த மனப்பான்மை, ஒத்துழைப்பு மற்றும் வெற்றி முடிவுகள் அவர்களின் விருப்பத்தின் பலனாக இருக்கும்" என்றார்.
மேலும் உக்ரைனின் நிலை குறித்து கின் கவலை தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோவுடனும் கலந்து பேச வேண்டும் என்று தெரிவித்தார்.
"உக்ரைனின் நிலைமை குறித்து சீனா மிகவும் கவலை கொள்கிறது. ஆழ்ந்த வருத்தமளிப்பதாக இருந்தாலும், அங்கு நடப்பது சில முக்கியமான படிப்பினைகளை வெளிப்படுத்துகிறது. மோதல்களும் போர்களும் வெற்றியாளர்களை உருவாக்காது. சிக்கலான பிரச்சினைக்கு எளிய தீர்வு இல்லை. முக்கிய நாடுகளுக்கு இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களை ஊக்குவிப்பதுடன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கும் இடையிலான உரையாடலை ஊக்குவிப்பதே இப்போதைக்கு மிக அவசரமான பணியாகும். ஒரு சமநிலையான, பயனுள்ள மற்றும் நிலையான ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பை நிறுவுவது அவசியம். இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/