ஒடிசாவின் முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங் நேற்று (வெள்ளிக்கிழமை) கட்சி தலைமையகமான தெலங்கானா பவனில் கட்சி தலைவர், முதல்வர் கே. சந்திரசேகர ராவ்வை சந்தித்து பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் இணைந்தார். பா.ஜ.கவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் அவர் ராஜினாமா செய்த நிலையில் பிஆர்எஸ் இணைந்துள்ளார்.
சி.பி.எம், ஜே.எம்.எம் உள்பட வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பிஆர்எஸ்ஸில் இணைந்தனர். கமாங்கின் மனைவியும் முன்னாள் எம்பியுமான ஹேமா கமாங், மகன் ஷிஷிர் கமாங், முன்னாள் ஒடிசா பாஜக இளைஞரணித் தலைவர் சினேகரஞ்சன் தாஸ், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) உறுப்பினர் ரவீந்திர மொஹபத்ரா ஆகியோரும் பிஆர்எஸ்சில் இணைந்தனர். இதைத் தவிர ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் (சிபிஐ) சேர்ந்த உறுப்பினர்களும் பிஆர்எஸ்ஸில் இணைந்தனர்.
கே.சி.ஆர் என்று அழைக்கப்படும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில், வரும் நாட்களில் மற்ற மாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் பி.ஆர்.எஸ்-ல் இணைவார்கள். ஒன்றாக பா.ஜ.கவை எதிர்போம் என்று கூறினார். ஷிஷிர் கமாங் வியாழனன்று, “2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி), பா.ஜ.க மற்றும் காங்கிரஸை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் கூட்டணி ஒடிசா சந்திக்கும்” என்று கூறினார்.
ஒடிசாவில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளிலும், 21 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த கட்சி உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலத்தில் முன்னிலையில் இல்லாத ஒரு கட்சி எப்படி இவ்வளவு வேட்பாளர்களை நிறுத்தும் என்று கேட்டதற்கு, ” பிஜேடி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தவிர மற்ற எதிர்க்கட்சிகள் ஒரே நோக்கம் கொண்ட கட்சிகளுடன் பிஆர்எஸ் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தும். ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) மற்றும் பிற மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறினார்.
தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ள தெற்கு ஒடிசாவில் பிஆர்எஸ் கவனம் செலுத்தும். கோராபுட், நபரங்கூர், அஸ்கா, பெர்ஹாம்பூர் மற்றும் கந்தமால் உள்ளிட்ட 5 மக்களவைத் தொகுதிகளிலும், இங்குள்ள 35 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெரும் என நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
79 வயதான கமாங், தெற்கு ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர் ஆவார். கோராபுட் நாடாளுமன்ற தொகுதியில் பிரபலமானவர். அங்கு 9 முறை எம்பியாக இருந்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பிஜேடியின் ஜினா ஹிகாக்காவிடம் தோல்வியடைந்தார்.
பாராளுமன்ற கட்சி கூட்டம்
இதற்கிடையில், சத்ரபதி சிவாஜியின் 13-வது வழித்தோன்றலான முன்னாள் ராஜ்யசபா எம்பியான சத்ரபதி சாம்பாஜி ராஜே, ஐதராபாத்தில் உள்ள பிரகதி பவனில் கே.சி.ஆரை வியாழக்கிழமை சந்தித்தார்.
அரசியல் சூழல், அடுத்த கட்ட நடவடிக்கை எனப் பல விஷயங்களை இருவரும் ஆலோசித்தாக முதல்வர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கே.சி.ஆருக்கு ராஜர்ஷி சாஹு சத்ரபதி புத்தகத்தை சாம்பாஜி ராஜே வழங்கினார்.
மேலும், நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நாளை (ஜனவரி 29) பிரகதி பவனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கான கட்சியின் வியூகம், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விவகாரங்கள் குறித்து எம்.பிகளிடையே கே.சி.ஆர் ஆலோசிப்பார் என்று கட்சி வட்டாராங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/