அமெரிக்க தொழிலாளர் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு , அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை அழைத்து வர ஹெச்- 1பி விசா பயன்படுத்தப்படுகிறது.
தற்போதைய, பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்த லட்சக்கணக்கான பூர்வீக அமெரிக்க குடிமக்களுக்கு உதவும் வகையில், ஹெச்- 1பி விசா வழிமுறைகளை அமெரிக்கா அதிபர் டிரம்ப் திருத்தி அமைத்துள்ளார்.
அமெரிக்கக் குடிமக்கள் வாங்கும் அதே சம்பளத்தை, ஹெச்1பி விசா பெற்று பணி புரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பெறும் வகையில் (சம்பள அளவீடுகள்) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஸ்பெஷாலிட்டி ஆக்குபேஷன்’ (speciality occupation) குறித்த வழிமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்பெஷாலிட்டி ஆக்குபேஷன் என்ற சிறப்பு பிரிவுகளில் பணி அமர்த்தப்படும் ஊழியர்களின் படிப்பு மற்றும் பட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதன் மூலம், சிறப்பு பணிக்கான ஊழியர்கள் உள்நாட்டில் இல்லை என்பதை நிருபீப்பது கடினமானதாக அமையும்.
நிறுவனங்கள் தவறான முறையில் ஹெச்- 1பி விசாவை பயன்படுத்துவது நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களிடம், "தற்காலிகப் பணிகளுக்காக அமெரிக்காவில் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் நுழைகின்றனர். பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் அமெரிக்க தொழிலாளர்கள் இவர்களோடு போட்டியிடும் சூழல் உள்ளது. சாதாரண காலங்களில், நேர்த்தியாக நிர்வகிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களில் பணியமர்த்தும் திட்டங்கள் பொருளாதாரத்திற்கு நன்மைகளை வழங்கும். ஆனால் கொரோனா பெருந்தொற்று விளைவாக ஏற்பட்ட பொருளாதார சூழ்நிலைகளில், அத்தகைய வேலைவாய்ப்பை அங்கீகரிப்பது அமெரிக்க தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்,”என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil