Keys to Maharashtra Cabinet with Fadnavis; keeps Home, Finance: மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே இருந்தாலும், பா.ஜ.க மற்றும் சிவசேனாவின் ஷிண்டே பிரிவு ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா ஒன்பது அமைச்சர் பதவிகள் சமமாக ஒதுக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை இலாகா ஒதுக்கீடு ஒரு தெளிவான சமிக்ஞையை வெளிப்படுத்துகிறது: இந்த அமைச்சரவையின் சாவி பா.ஜ.க தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் வசம் இருக்கும்.
முதலமைச்சரால் தக்கவைக்கப்பட்ட நகர்ப்புற மேம்பாடு தவிர, உள்துறை, நிதித்துறை, எரிசக்தி மற்றும் வீட்டுவசதி ஆகிய மற்ற அனைத்து முக்கிய இலாகாக்களும் ஃபட்னாவிஸுக்கு சென்றுள்ளது.
இதையும் படியுங்கள்: ஹேஷ்டேக் அரசியல்: பிரிவினை வீடியோ; கர்நாடகாவில் நேருவை மறைத்து சாவர்க்கர் விளம்பரம்… பாஜக – காங். மோதல்
எந்தவொரு கூட்டணி அரசாங்கத்திற்கும், மோதல் பொதுவாக நகர்ப்புற வளர்ச்சி, உள்துறை, நிதித்துறை மற்றும் வருவாய் ஆகிய முதல் நான்கு இலாகாக்களுக்கு மட்டுமே இருக்கும். இந்த நான்கு துறைகளில் ஷிண்டேவுக்கு நகர்ப்புற வளர்ச்சி மட்டுமே கிடைத்தது. மீதமுள்ள மூன்று துறைகள் பா.ஜ.க வசம் உள்ளது. இரண்டு துறைகள் ஃபட்னாவிஸ் வசமும், மூன்றாவது, வருவாய்த்துறை மூத்த பாஜக தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் வசம் உள்ளது. இவர் ஃபட்னாவிஸின் முக்கிய கையாகக் கருதப்படுகிறது.
ஜூலை 2019 இல் பா.ஜ.க.,வில் இணைந்தவரும் காங்கிரஸிலிருந்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான வி.கே பாட்டீல், “ஃபட்னாவிஸுக்கு விசுவாசமாக” இருந்ததற்காக வருவாய்த் துறையுடன் வெகுமதி அளிக்கப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிக்கு அடுத்தபடியாக வருவாய்த்துறை அதிகம் விரும்பப்படுகிறது. மகாராஷ்டிராவில் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய 355 தாலுகாக்களில் உள்ள வளர்ச்சிகளைக் கண்காணிக்கும் ஒரு முக்கியமான அமைச்சகம், அடிமட்டத்தில் மாநில நிர்வாகத்தைக் கட்டுப்படுத்த உதவுவதால், எந்தவொரு அரசாங்கத்தின் முதுகெலும்பாக வருவாய்த்துறை கருதப்படுகிறது.
துணை முதல்வர் பதவிக்குத் தள்ளப்பட்ட ஃபட்னாவிஸ்-க்கு, கூட்டணி ஆட்சியை நடத்துவதில் அதிக பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
106 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கூட்டணியில் பெரிய கட்சியாக இருக்கும் பா.ஜ.க., முக்கிய இலாகாக்கள் மீது தங்களுக்கு உரிமை உண்டு என்று ஷிண்டே சேனாவை நம்ப வைக்க முடிந்தது.
ஆச்சரியம் எதுவும் இல்லாத வகையில், பா.ஜ.க.,வுக்கு உள்துறை, நிதித்துறை, வீட்டு வசதி, எரிசக்தி, வருவாய், கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு, வனத்துறை, கலாச்சாரம், மீன்வளம், உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, ஜவுளி, சட்டமன்ற விவகாரங்கள், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், மருத்துவக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், பழங்குடியினர் நலன், தொழிலாளர், பொதுப்பணித் துறை, உணவு மற்றும் குடிமைப் பொருட்கள், கூட்டுறவு, ஓ.பி.சி நலன், சுற்றுலா, திறன் மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, மற்றும் நெறிமுறை ஆகிய முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
40 அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 10 சுயேச்சைகள் என 50 உறுப்பினர்களைக் கொண்ட ஷிண்டே பிரிவு சிவசேனாவுக்கு, பொது நிர்வாகம், நகர்ப்புற மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், சமூக நீதி, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, பேரிடர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃப் வாரியம், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், துறைமுகங்கள் மற்றும் சுரங்கம், உணவு மற்றும் மருந்து நிர்வாகம், தொழில்கள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், விவசாயம், கலால், வேலை உறுதித் திட்டம் மற்றும் தோட்டக்கலை, பள்ளிக் கல்வி மற்றும் மராத்தி மொழி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜூன் 30 அன்று ஷிண்டே மற்றும் ஃபட்னாவிஸ் பதவியேற்ற நாற்பத்தொரு நாட்களுக்குப் பிறகு, பா.ஜ.க மற்றும் ஷிண்டே சிவசேனாவிலிருந்து தலா ஒன்பது அமைச்சர்களுடன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிர அரசில் முதல்வர் உட்பட மொத்தம் 43 அமைச்சர்கள் இருக்க முடியும். அமைச்சரவையின் தற்போதைய பலம் 20 ஆக இருப்பதால், இன்னும் 23 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பா.ஜ.க உள்வட்டாரம் ஒருவர் கூறுகையில், “ஃபட்னாவிஸ் உள்துறை மற்றும் நிதித்துறையை மட்டுமே வைத்திருப்பார். அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில், அவருக்கு இப்போது உள்ள மற்ற இரண்டு துறைகளும் (வீட்டுவசதி மற்றும் எரிசக்தி) பா.ஜ.க.,வைச் சேர்ந்த புதிய அமைச்சர்களுக்கு வழங்கப்படும்,” என்று கூறினார்.
பா.ஜ.க.,வின் மூத்த அமைச்சர்கள் சுதிர் முங்கந்திவார் மற்றும் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் புருவங்களை உயர்த்தியுள்ளன. முந்தைய ஃபட்னாவிஸ் அமைச்சரவையில் (2014-2019) முக்கியமான நிதித்துறை மற்றும் வனத்துறையை வைத்திருந்த முங்கந்திவாருக்கு இப்போது வனத்துறை, மீன்வளம் மற்றும் கலாச்சார துறைகள் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சந்திரகாந்த் பாட்டீலுக்கு, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, ஜவுளி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் ஆகிய துறைகள் கிடைத்துள்ளன. முந்தைய பா.ஜ.க ஆட்சியில், பாட்டீலுக்கு பொதுப்பணித்துறை, கூட்டுறவு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவை இருந்தன.
பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக நந்தூர்பாரைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த எம்.எல்.ஏ விஜய்குமார் காவிட் உள்ளார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த காவிட், 2014 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக என்.சி.பி.,யில் இருந்து பா.ஜ.க.,வில் சேர்ந்தவர்.
ஃபட்னாவிஸின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் கிரிஷ் மகாஜன், ஊரக வளர்ச்சி, மருத்துவக் கல்வி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆகிய துறைகளைப் பெற்றுள்ளார். முந்தைய ஃபட்னாவிஸ் அரசில் அவர் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர்.
பொதுப்பணித்துறை மற்றும் உணவு மற்றும் சிவில் சப்ளை உள்ளிட்ட முக்கிய துறைகள் பா.ஜ.க.,வின் ரவீந்திர சவானிடம் சென்றுள்ளன.
பா.ஜ.க.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இலாகா ஒதுக்கீட்டில் ஆச்சரியம் இல்லை. ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை பா.ஜ.க விட்டுக் கொடுத்தது. எனவே முக்கியமான துறைகளை எடுத்துக்கொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது,” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil