மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் டிஜிட்டல் செய்தி, ஓடிடி இயங்கு தளம் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்கள் செயல்படும் என்று உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
தற்போதைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை ஒளிபரப்புதல்/ பதிவேற்றம் செய்யும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு என்று உரிய சட்டம் இதுவரை இல்லை. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, டிஜிட்டல் ஊடகங்களுக்கான சட்ட கட்டமைப்பை அளித்தாலும், இவை எந்தவொரு அமைச்சகத்தாலும் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவில்லை.
கடந்த நவம்பர் 9-ம் தேதி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இந்த உத்தரவில் கையெழுத்திட்டார். நேற்று, இரவு அமைச்சரவை செயலகத்தின் செயலாளரால் வெளியிடப்பட்ட உத்தரவில்," அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் டிஜிட்டல் ஊடகங்கள் அதிகரப்பூர்வமாக கொண்டுவந்தாலும், டிஜிட்டல் ஊடகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நலன்களை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதற்கும் சுய கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் (அ) உரிய சட்டத்தின் கீழ் டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் கொண்டுவரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் “ஆன்லைன் உள்ளடக்க வழங்குநர்களால் கிடைக்கப்பெற்ற திரைப்படங்கள் மற்றும் ஆடியோ-காட்சி திட்டங்கள்” மற்றும் “ஆன்லைன் தளங்களில் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் உள்ளடக்கம்” ஆகியவை அடங்கும் என்று இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதிகளை அமைச்சரவை செயலகம் திருத்தியது.
அச்சு ஊடகங்களைப் பொறுத்தவரை, இந்திய பத்திரிகை கவுன்சில் உள்ளது. இது ஒரு சட்டரீதியான, நீதிமன்ற செயல்பாடுகளை கொண்டது. தொலைக்காட்சி செய்திகளுக்கு, செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம் என்ற சுய கட்டுப்பாடு அமைப்பு செயல்படுகிறது;
திரைப்படங்களைப் பொறுத்தவரை , 1952 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திரைப்படத் தணிக்கைச் சட்டத்தின் மூலம் இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவை மத்திய அரசு உருவாக்கியது. தற்போது, திரைபடத் தணிக்கைக் குழு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது; இந்தியாவில் செய்திகள் அல்லாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நெறிமுறைப்படுத்த ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் சபை உள்ளது (broadcasting content complaints council). இது சுயாதீனமான மற்றும் சுய கட்டுப்பாடு அமைப்பாகும்; இதேபோல் இந்திய விளம்பரத் தர நிர்ணய கவுன்சில், விளம்பரங்களை நெறிமுறைப்படுத்துகிறது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் அரசின் செய்திக் குறிப்பு 4/2019 -ன்படி மத்திய அரசின் முடிவுக்கு இணங்க டிஜிட்டல் ஊடகம் வாயிலாக தற்போதைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை ஒளிபரப்புதல்/ பதிவேற்றம் செய்யும் நிறுவனங்களில் 26% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பதுவதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.