டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடிகளை தென் மாநிலங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்ற தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியன் எக்ஸ்பிரஸ் கள ஆய்வில் தெரிய வந்தது.
இந்த மாத தொடக்கத்தில் என்.ஐ.ஏ அமைச்சகத்திற்கு இந்த கோரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது. அதில், 25 ரவுடிகளின் பெயர்கள், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்டோரின் பெயர்கள் இருப்பதாக தெரிகிறது.
நான்கு வட மாநிலங்களில் உள்ள இந்த கும்பல்களை சேர்ந்தவர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஒரு கிரிமினல் சிண்டிகேட் மூலம் நிதி திரட்டவும், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தவும், பரபரப்பான குற்றங்கள் புரியவும், பிரபலமானவர்கள் திட்டமிட்டு கொலை செய்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாகவும், இளைஞர்களை தவறான வழிகளுக்கு பயன்படுத்த சதி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
என்.ஐ.ஏவின் வழக்கு விசாரணையில் இந்த கும்பல்களில் பெரும்பாலானவர்கள் சிறையில் இருந்தவாறு குற்றச் செயல்களை "சுமூகமாக" செய்தது கண்டறிந்தது.
அவர்களின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கவனித்த பிறகு, குற்றவியல் சிண்டிகேட்டை உடைக்க ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க என்.ஐ.ஏ முடிவு செய்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டது. அதன்படி, முதலில் பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட ரவுடி கும்பல்களை அடையாளம் கண்டு, அவர்களை இந்தியாவின் தென் பகுதியில் உள்ள சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் அவர்களின் தொடர்பு துண்டிக்கப்படும், முதலில் மொழி பிரச்சினையை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.
சிறைக்குள் சதி திட்டம்
சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் அமைச்சகம் ஆலோசித்து, அதன் பிறகு அவர்கள் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள். அவர்கள் எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்ட விதிகளின் படி எந்த ஒரு குற்றவாளியையும் நாட்டில் உள்ள எந்த சிறையில் வேண்டுமானாலும் எளிதாக மாற்றலாம் என கூறப்படுகிறது.
வியாழன் அன்று, என்.ஐ.ஏ பஞ்சாப் சிறையில் இருந்து பிஷ்னோய்யை கைது செய்தது. பிஷ்னோய் பெரும்பாலான சதித்திட்டங்களை அவர் சிறையில் இருந்தவாறு செயல்படுத்தியுள்ளார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தொடர்பு மூலம் அவர் சதித்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்றும் கண்டறியப்பட்டது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக திட்ட கொலை, பரபரப்பான கொலைகளுக்கு சதி திட்டம் தீட்டுதல் உட்பட பல வழக்குகளில் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் குற்றஞ்சாட்டப்பட்டு காவல்துறையால் தேடப்பட்டு வந்தது என என்ஐஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானை சேர்ந்த குண்டர் மற்றும் பயங்கரவாதி ஹர்விந்தர் சிங் என்ற ரிண்டா, போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் இந்த மாதம் இறந்ததாக கூறப்படுகிறது. ரிண்டா பஞ்சாப் சிறையில் இருந்தபோது பிஷ்னோயை சந்தித்துள்ளார். இது குறித்த விசாரணையில், மே மாதம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையகத்தில் ஆர்.பி.ஜி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களுக்கு பிஷ்னோயின் ஆட்களை ரிண்டா பணியமர்த்தியதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதி தப்பி ஓட்டம்
பிஷ்னோய் மற்றும் பிற ரவுடிகள் கோல்டி ப்ரார், விக்ரம் பிரார் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் தொடர்பான 2 வழக்குகளை டெல்லி காவல்துறையிடமிருந்து என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றி எடுத்துக்கொண்டது.
2019-ம் ஆண்டு, ஜம்மு மற்றும் கதுவா சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பல பயங்கரவாதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹரியானாவிற்கு மாற்றப்பட்டனர். மேலும், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு மற்றம் காஷ்மீரின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 26 கைதிகள் ஸ்ரீநகரில் இருந்து ஆக்ரா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
மேலும், 2018-ம் ஆண்டு கிட்டத்தட்ட 40 பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஸ்ரீநகரில் இருந்து பள்ளத்தாக்கிற்கு வெளியே உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லஷ்கர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமது நவீத் ஜாட் அங்கிருந்து தப்பி ஓடிய பிறகு இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.