scorecardresearch

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: 19 கட்சிகள் புறக்கணிப்பு; முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பிரதமர் மோடி திறக்க கூடாது. நாடாளுமன்றத்தின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கூறுகின்றனர்.

PM Modi inspects the new Parliament building. (ANI file)
PM Modi inspects the new Parliament building. (ANI file)

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வருகிற மே 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் டி.எம்.சி, தி.மு.க, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல். பிரதமர் மோடிக்கு பதிலாக நாடாளுமன்றத்தின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும். அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வாதிட்டுள்ளனர்.

காங்கிரஸ் தனது முடிவை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், அக்கட்சியும் விழாவை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

2020 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவையும் காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

19 எதிர்க் கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி), தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி), சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சமாஜ்வாதி கட்சி (எஸ்பி), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), முஸ்லிம் லீக், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்), தேசிய மாநாடு, தி. கேரள காங்கிரஸ் (எம்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்.எஸ்.பி), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க), விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க), மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்.எல்.டி) ஆகிய கட்சிகள் விழாவை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர்.

தலைநகரில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அரசாணைக்கு எதிரான ஆதரவை கோருவதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த அதே நாளில் நாடாளுமன்ற கட்ட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை டி.எம்.சி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்தன. மேலும், டெல்லி நிர்வாகம் தொடர்பான மசோதாவை தனது கட்சி நாடாளுமன்றத்தில் எதிர்க்கும் என்று பானர்ஜி உறுதியளித்தார்.

டி.எம்.சி-யின் ராஜ்யசபா எம்.பி டெரெக் ஓ பிரையன் கூறுகையில், நாடாளுமன்றம் என்பது புதிய கட்டடம் மட்டுமல்ல; இது பழைய மரபுகள், மதிப்புகள், முன்னுதாரணங்கள் மற்றும் விதிகள் கொண்ட ஒரு ஸ்தாபனம். இது இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். பிரதமர் மோடிக்கு அது புரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா, அவரின் ‘நான், நான் தான்’ என்பதை காட்டுகிறது என்றார்.

மேலும், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி சுகேந்து சேகர் ராய், இது அநாகரீகமானது. பா.ஜ.க கட்சி பெண் மற்றும் பழங்குடியின குடியரசுத் தலைவரை நேரடியாக அவமதிக்கிறது. கட்டடமும் இன்னும் கட்டி முடிக்கவில்லை. அப்படி இருக்க திறப்பு விழாவுக்கான இந்த அவசரம் என்ன விளக்குகிறது? மே 28 (V D ) சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதாலா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங், முர்முவை அழைக்காதது அவருக்கும், அதே போல் நாட்டின் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு அவமானம் என்று கூறினார். ஜனாதிபதியை அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி திறப்பு விழாவை புறக்கணிக்கும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

சி.பி.ஐ பொதுச் செயலாளர் டி. ராஜா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், விழாவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகளிடையே அதிக ஒருமித்த கருத்து உள்ளது. இந்திய நாட்டிற்கு தலைவர் குடியரசுத் தலைவர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் அரசாங்கத்தின் தலைவர் என்றார்.

சி.பி.எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், குடியரசுத் தலைவரை புறக்கணித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

காங்கிரஸை தாக்கிப் பேசிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “1975-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தை திறந்து வைத்தார் என்றும் ஆகஸ்ட் 15, 1987 அன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நாடாளுமன்ற நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்” என்றும் கூறினார்.

தொடர்ந்து, காங்கிரஸுக்கு “தேசிய உணர்வு மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்தில் பெருமை இல்லை. அனைத்து ஜனநாயகங்களின் தாயின் புதிய இந்தியாவின் கோவிலாக, சந்ததியினருக்கான மதிப்புமிக்க சொத்தின் இந்த உருவாக்கத்தை கொண்டாடுவதில் அவர்களால் ஏன் தேசத்துடன் இணைந்து கொள்ள முடியவில்லை. பொய்களின் அடிப்படையில் பாகுபாடான விவாதங்களில் ஈடுபடுகிறது” என்றார்.

பூரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “அதிகாரிகள் பணிபுரியும் இணைப்பு கட்டடத்திற்கும் மற்றும் மிகவும் குறைவாக பயன்படுத்தப்படும் நூலகத்தை திறப்பதற்கும் ஜனநாயக கோயில் கர்ப்பக்கிரகம் (சன்னதி) திறந்து வைப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தபோது, ​​1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி அப்போதைய ஜனாதிபதி வி.வி கிரியால் கட்டடத்திற்கான அடிக்கலை நாட்டினார். இது மே 2014 இல் ‘பார்லிமென்ட் ஹவுஸ் எஸ்டேட்’ என்ற தலைப்பில் லோக்சபா செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நூலகக் கட்டடத்துக்கு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி 1987-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார், மேலும் 1994-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் வி பாட்டீல் பூமி பூஜை செய்தார் என்று மக்களவை வெளியீடு தெரிவித்துள்ளது” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Nineteen opposition parties to skip parliament inauguration