Shaju Philip
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் 4 பேரும் பலியானவர்களில் ஒருவரின் நெருங்கிய உறவினர்கள்.
முன்னதாக, இரண்டு இறப்புகளைத் தொடர்ந்து மாவட்டத்தில் சுகாதாரத் துறை உஷார்படுத்தப்பட்டது.
இறந்த நபர்களின் மாதிரிகள் மற்றும் நிபா வைரஸ் தொற்று போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சையில் உள்ளவர்களின் மாதிரிகள் இறுதி சோதனை மற்றும் உறுதிப்படுத்தலுக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்பப்பட்டன. நிலைமையை ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்காக செவ்வாய்க்கிழமை காலை கோழிக்கோடு சென்றடைந்த சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், மாலைக்குள் மாதிரிகளின் ஆய்வக முடிவுகள் கிடைக்கும் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
காய்ச்சலால் (மூளை அழற்சி) இறந்த இரு இறந்த நபர்களின் தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ளவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். நிபா உறுதி செய்யப்பட்டால், தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் சமூகக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒரு நோயாளியும், மற்றொருவர் செப்டம்பர் 11 ஆம் தேதியும் இறந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களின் உறவினர்களான நான்கு பேர், இறந்தவர் வெளிப்படுத்திய அதே அறிகுறிகளுடன் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
செப்டம்பர் 11-ம் தேதி இறந்த நோயாளி ஆகஸ்ட் 30-ம் தேதி இறந்த நபருடன் தொடர்பு கொண்டதாக அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறினார். அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மருத்துவமனையில் சந்தித்துக் கொண்டனர்.
கோழிக்கோடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆயஞ்சேரி மற்றும் மருதோங்கரா கிராமப் பஞ்சாயத்துகளில் சுகாதாரம் மற்றும் ஊராட்சித் துறைகள் ஏற்கனவே கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. இரண்டு கிராமங்களும் சங்கரோத் பஞ்சாயத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளன, அங்கு 2018 இல் நிபா பரவியது. இந்த பகுதிக்கு அருகில் அடர்ந்த தாவரங்கள் மற்றும் காடுகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில், சங்கரோத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள சாத்தமங்கலத்தில் ஒரு பாதிப்பு பதிவாகியது.
2018 மே-ஜூன் மாதங்களில் கோழிக்கோடு மாவட்டத்தில் 18 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டபோது கேரளாவில் நிபா அதிகரித்தது. ஆய்வக சோதனைகளால் உறுதிப்படுத்த முடியாத பாதிப்புகள் உட்பட, பாதிக்கப்பட்டவர்களில் 17 பேர் இறந்துவிட்டனர்.
2019 ஆம் ஆண்டில், எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு பாதிப்பு பதிவாகியது, ஆனால் எந்த உயிரிழப்பும் இல்லை. செப்டம்பர் 2021 இல், கொடிய நிபா வைரஸ் கோழிக்கோட்டில் மீண்டும் தோன்றியது, 12 வயது சிறுவன் உயிரிழந்தான். இரண்டு நிகழ்வுகளிலும், கோழிக்கோட்டில் 2018 தொற்று அதிகரித்ததில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் காரணமாக வைரஸ் மேலும் பரவாமல் தவிர்க்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில், கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு கனி வௌவால் வகைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் நிபா வைரஸ் ஆன்டிபாடிகளை புனே தேசிய வைராலஜி நிறுவனம் கண்டறிந்தது. பாலூட்டிகளான இந்த வௌவால்கள் வைரஸின் ஆதாரம் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது மற்றும் ஆய்வக கண்டுபிடிப்பு இதை வலுப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட கனி வெளவால்கள் மூலம் பன்றிகள், நாய்கள், பூனைகள், ஆடுகள், குதிரைகள் மற்றும் செம்மறி ஆடுகள் போன்ற பிற விலங்குகளுக்கும் நோய் பரவும். பொதுவாக, நிபா வைரஸின் விலங்கு ஹோஸ்ட் ஆக அடையாளம் காணப்படுகின்ற கனி வெளவால்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.
நிபா வைரஸ் தொற்று லேசானது முதல் கடுமையான நோயை ஏற்படுத்தலாம், பின்னர் மூளையில் பெரிய வீக்கத்தை (மூளை அழற்சி) ஏற்படுத்தி, மரணத்திற்கு வழிவகுக்கும்.
நோய்த்தொற்றின் அறிகுறிகள் வைரஸுக்கு வெளிப்பட்ட நான்கு நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை எந்த நேரத்திலும் தோன்றும். நோயாளிகள் பொதுவாக காய்ச்சல் மற்றும் தலைவலியைப் புகாரளிக்கின்றனர், இது இருமல், தொண்டை புண் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற சுவாச நோய் அறிகுறிகளுடன் மூன்று நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும்.
நோய் மூளை அழற்சியை ஏற்படுத்தினால், நோயாளி தூக்கம், திசைதிருப்பல் மற்றும் மனக் குழப்பத்தை அனுபவிக்கலாம், பின்னர் 1-2 நாட்களுக்குள் கோமா நிலைக்கு மிக விரைவாக செல்லலாம்.
உலக சுகாதார அமைப்பு (WHO) படி, 40 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரையிலான பாதிப்புகள் மரணத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், கோழிக்கோட்டில் 2018 இல் தொற்று அதிகரிப்பு ஏற்பட்டப்போது இறப்பு விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“