Advertisment

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்; கோழிக்கோட்டில் 40 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிப்பு

கேரளாவில் காணப்படும் வைரஸ் மாறுபாடானது, மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவும் பங்களாதேஷின் மாறுபாடு; தொற்று குறைவாக இருந்தாலும் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது - அமைச்சர் வீணா ஜார்ஜ்

author-image
WebDesk
New Update
Nipah containment zone

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆயஞ்சேரி கிராமத்தில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க, அப்பகுதியை கட்டுப்பாட்டு மண்டலமாக அதிகாரிகள் அறிவித்ததை அடுத்து, சாலையை மறிப்பதற்காக, "நிபா தடுப்பு மண்டலம்" என்ற பலகையை குடியிருப்பாளர்கள் பொருத்தியுள்ளனர். (ராய்ட்டர்ஸ்)

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் மிகவும் ஆபத்தான நிபா வைரஸ் இரண்டு உயிர்களைக் கொன்றது, மேலும் இருவரை பாதித்துள்ள நிலையில், மாவட்டத்தில் நிபா நோயாளிகளின் தொடர்பு பட்டியலில் குறைந்தது 702 பேர் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, மாவட்ட அதிகாரிகள் புதன்கிழமை 40 க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களை அறிவித்தனர்.

Advertisment

ஒன்பது வயது சிறுவனுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். "திங்கட்கிழமை இறந்த நபரின் மாதிரிகள் மற்றும் ஒன்பது வயது சிறுவன் உட்பட சிகிச்சையில் உள்ள மற்ற இருவரின் மாதிரிகளை சோதனை செய்ததில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று அமைச்சர் கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க: Nipah virus in Kerala: Over 40 containment zones declared in Kozhikode as contact list expands to 702

ஆகஸ்ட் 30 அன்று முதல் நபரின் மரணம், கல்லீரல் அழற்சி என்ற இணைநோய் காரணமாக ஏற்பட்ட மரணமாகக் கருதப்பட்டது, ஆனால், ஏற்கனவே ஐ.சி.யு.,வில் இருக்கும் அவரது ஒன்பது வயது மகன் மற்றும் அவரது 24 வயது சகோதரருக்கு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கோழிக்கோட்டில் வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து கண்ணூர், வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

கோழிக்கோட்டில் ஏழு கிராமங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு

கோழிக்கோட்டில், ஏழு கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆத்தஞ்சேரி, மருதோங்கரை, திருவள்ளூர், குட்டியடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி, கவிழும்பாறை ஆகியவை அடங்கும். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.

இந்த மண்டலங்களுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ எந்தப் பயணமும் அனுமதிக்கப்படாது, மேலும் இந்த பகுதிகளை சுற்றி பாதுகாப்பு பணியில் இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும், மருந்தகங்கள் மற்றும் சுகாதார மையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு இல்லை.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்பட முடியும், அதே நேரத்தில் வங்கிகள், பிற அரசு அல்லது அரசாங்க நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கன்வாடிகள் இயங்காது. கட்டுப்பாட்டு மண்டலங்கள் வழியாக தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் பேருந்துகள் அல்லது வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோட்டில் நிபா வைரஸ் நோயாளிகள் என சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கான வார்டு தயாராகி வரும் மருத்துவமனையில் நிபா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு, நுழைவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதுஎன்ற பலகையை ஊழியர்கள் நிறுவினர். (ராய்ட்டர்ஸ்)

பீதியடைய வேண்டாம்: முதல்வர் பினராயி விஜயன்

மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். ”சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையின் அறிவுறுத்தல்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்," என்று முதல்வர் கூறினார்.

கேரளாவில் வெளவால்களை ஆய்வு செய்யும் புனே தேசிய வைரலாஜி நிறுவன குழுக்கள்

புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் (என்.ஐ.வி) குழுக்கள், கேரளாவுக்கு வந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நிபாவை பரிசோதிக்கவும், வௌவால்களை ஆய்வு செய்யவும் மொபைல் ஆய்வகத்தை அமைக்கும் என்று மாநில அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து இன்று கேரளாவுக்கு தொற்றுநோயியல் நிபுணர்கள் குழு வந்து ஆய்வு நடத்த உள்ளது. கூடுதலாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நிபா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்று முதல்வர் சட்டசபையில் தெரிவித்தார்.

கண்காணிப்பு, தொடர்புத் தடமறிதல், குறைந்த மற்றும் அதிக ஆபத்து என வகைப்படுத்துதல், அவர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகள் அமைத்தல், கட்டுப்பாட்டு மண்டலங்களை வரையறுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ICMR இலிருந்து மருந்துகளை வாங்குதல் போன்றவை வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறையின் சில நடவடிக்கைகளாகும். .

பங்களாதேஷ் வகை வைரஸ் மாறுபாடு

கேரளாவில் காணப்படும் வைரஸ் மாறுபாடானது, மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவும் பங்களாதேஷின் மாறுபாடு என்றும், தொற்று குறைவாக இருந்தாலும் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் சட்டசபையில் தெரிவித்தார்.

புதிய சிகிச்சை நெறிமுறைகளைக் கோரும் எதிர்க்கட்சிகள்

கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனும், மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் நிபாவுக்கு புதிய சிகிச்சை நெறிமுறைகளின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

மத்திய அரசு அறிவித்த பிறகும் நிபா தொற்று குறித்து அரசால் அறிவிக்க முடியவில்லை என்றும் சதீசன் கூறினார்.

”நிபாவை பரிசோதித்து உறுதிப்படுத்த, மாநிலத்தில் உள்ள தொன்னக்கல்லில் உள்ள மேம்பட்ட வைராலஜி நிறுவனம் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு ஆய்வகங்கள் உள்ளன, ஆனால் அதை அறிவிக்க அவர்களுக்கு அனுமதி இல்லை. அந்த அனுமதி புனேவில் உள்ள என்.ஐ.வி.,யிடம் மட்டுமே உள்ளது. இங்குள்ள இரண்டு ஆய்வகங்களில் நிபாவை அறிவிக்க அனுமதி பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

சதீசன் மேலும் கூறுகையில், வைரஸைக் கையாள்வதற்கான முறையான பயிற்சி அதிகமான சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை, மேலும் எதிர்காலத்தில் அதை திறம்பட எதிர்கொள்ள நோய் மற்றும் அதன் பரவல் பற்றிய தரவு எதுவும் சேகரிக்கப்படவில்லை, என்று கூறினார்.

முதன்முதலில் 2018ல் கேரளாவை தாக்கிய நிபா வைரஸ்

2018 ஆம் ஆண்டில் கேரளாவில் முதல்முறையாக நிபா வைரஸ் பரவியபோது, பாதிக்கப்பட்ட 23 பேரில் 21 பேர் இறந்தனர், அதே நேரத்தில் 2019 மற்றும் 2021 இல் நிபா வைரஸ் பரவல்கள் மேலும் இரண்டு உயிர்களைக் கொன்றன.

நிபா வைரஸ்

மலேசியா (1998) மற்றும் சிங்கப்பூரில் (1999) மனிதர்களிடையே நிபா வைரஸ் முதன்முதலில் பரவியது. வைரஸ் அதன் பெயரை மலேசியாவில் உள்ள கிராமத்திலிருந்து பெறுகிறது, அங்கு வைரஸால் முதலில் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நபர் இறந்தார்.

நிபா என்பது விலங்கில் இருந்து மனிதனுக்குப் பரவும் நோயாகும், அதாவது இது பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது அசுத்தமான உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு மூலம் இது நேரடியாக மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகிறது, என WHO கூறுகிறது. அதன் அறிகுறிகள், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) படி, காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாந்தி.

கடுமையான சந்தர்ப்பங்களில், திசைதிருப்பல், தூக்கமின்மை, வலிப்புத் தாக்கங்கள், மூளையழற்சி (மூளையின் வீக்கம்) ஏற்படலாம், கோமா மற்றும் மரணம் வரை செல்லலாம்

(கூடுதல் தகவல்கள் - ஏஜென்சிகள்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kerala Nipah Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment