கேரள மாநிலத்தை உலுக்கி வரும் நிபா வைரஸ் இதுவரை 15 உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை இந்த வைரஸ் தாக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் என்றால் என்ன?
1998 மற்றும் 1999 ஆண்டுகளில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் முதன் முதலில் தோன்றியது. இந்த வைரஸ் முதன் முதலில் பன்றிகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளிடம் இருந்து பரவுவது தெரிய வந்தது. பின்னர் ஆராய்ச்சி நடத்தியதில், நிபா வைரஸ் வவ்வால்களின் உடல்களில் இருப்பதாகவும், வவ்வால்கள் மூலம் பிற உயிரினங்களுக்குப் பரவுவதாகவும் கண்டறியப்பட்டது. இது மூலம் மனிதர்களை இந்த வைரஸ் தாக்குகிறது. மலேசியாவில் முதன் முதலாக இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்த நபரின் பெயரையே இந்த வைரசுக்குச் சூட்டியுள்ளனர். இதன் மூலம் இதனை “நிபா வைரஸ்” என்று அழைக்கின்றனர்.
வைரஸ் அட்டேக் எப்படி நிகழும்:
வவ்வால், பன்றி மற்றும் ஆந்தை போன்ற விளங்குகளில் சிறுநீர், மலம், எச்சில் ஆகியவற்றில் நிபா வைரஸ் இருக்கும். இந்த விளங்களின் சிறுநீர் அல்லது எச்சில் போன்றவை மனிதர்களின் குடிநீர், உணவுப் பொருட்களில் கலந்திருந்தால் நோய் தாக்கும் அபாயம் ஏற்படும். சில நேரங்களில் நிபா வைரஸ் மனிதர்கள் வாழு பகுதியில் நிறைந்திருந்தாலும் மக்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
நாம் தினமும் அணியும் ஆடை, செருப்புகள் மற்றும் வாகனங்கள் உட்பட அன்றாட உபகரணங்களில் கூட இந்த வைரஸ் மறைந்திருக்கலாம். டெங்கு, ஸ்வைன் ஃப்லூ போன்று இந்த நிபா வைரஸ் வேகமாகப் பரவி உயிர்க்கொல்லி நோயை உண்டாக்கும். விளங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ் பின் நாட்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவும். இதனால் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் நிலை ஏற்படும்.
நிபா வைரஸ் தாக்கத்தை கண்டறியும் அறிகுறிகள்:
- காய்ச்சல்
- தலைவலி
- வாந்தி
- மயக்கம்
- மன உளைச்சல்
- மன குழப்பம்
- கோமா
ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டு பின்பு அது மூளைக்காய்ச்சலாக மாறி உயிரைப் பறிக்கும். எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் எது நேர்ந்தாலும் பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அலட்சியமாக இருந்தால் மரணமடையவும் அதிக வாய்ப்புள்ளது.
நிபா வைரஸ் தாக்கத்திற்கான மருத்துவம்:
இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் நோய்களுக்கு மருத்துவமும் மருந்துகளும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் நிபா வைரஸ் தாக்கினால், ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். காய்ச்சலும் நோயின் தாக்கமும் குறைவாகவோ அல்லது ஆரம்ப கட்டத்தில் இருந்தாலொ உடனே மருத்துவம் எடுப்பது அவசியம். அந்த மருத்துவத்தில் காய்ச்சலின் தாக்கத்தைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். காய்ச்சல் குறைவதனால் நிபா வைரஸ் தாக்கமும் குறையும் என்கின்றனர்.
நிபா வைரசால் இதுவரை பலியானோரின் எண்ணைக்கை:
கேரளாவை உலுக்கும் நிபா வைரஸ்:
கேரளாவில் இந்த நிபா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகவும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி பெரம்பரா, மலப்புரம் மற்றும் கோழிகோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கையில் ஒரு செவிலியரும் அடக்கம்.
நிபா வைரசால் தாக்கப்பட்ட 4 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த செவிலியரும் இதே வைரசால் தாக்கப்பட்டு நேற்று பலியாகியுள்ளார்.
நிபா வைரஸ்-க்கு அடுத்தடுத்து உயிர்களைப் பறிகொடுத்து வரும் நிலையில், கேரளா சுகாதாரத்துறை தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கேரளா முழுவதும் ஆங்காங்கே மருத்துவ முகாம்களை அமைத்து பொதுமக்கள் அனைவரையும் பரிசோதித்து வருகின்றனர். நிபா வைரஸ் நோய் ஏற்படும் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அந்த நபருக்குச் சிகிச்சையை தொடங்குகின்றனர். எனவே யாரும் அச்சமடைய வேண்டாம் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.
நிபா வைரஸ் குறித்து எந்த வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேரளா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தைத் தாக்குமா நிபா வைரஸ்?
கேரளாவின் அடுத்த மாவட்டமாகத் தமிழகம் இருப்பதால் கேரள - தமிழக எல்லைகளின் மூலம் இந்த நோய் தமிழகத்தை பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாள ராதாகிருஷ்ணன், “இதுவரை தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் தாக்கவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாகக் கேரள - தமிழக எல்லைகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு எல்லைப் பகுதியில் இருக்கும் மக்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மூளைக்காய்ச்சல் இருப்பவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வருகிறோம்.” என்று தெரிவித்தார்.
கேரளாவில் அதிகமாகப் பரவி வரும் காய்ச்சலால் தென் இந்தியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை எந்த நோயாளிகளும் இந்த நோய்க்காக அனுமதிக்கப்படவில்லை என்பதால், யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.