கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து அவர் ஹாங்காங்கில் உள்ளார் என்ற தகவல் வெளியானது. அவரைக் கைது செய்ய இந்திய அரசு ஹாங்காங்கிடம் கேட்டுக்கொண்டது.
பதிலுக்கு ஹாங்காங்க் சீனாவிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று பதிலளித்து, சீனாவிடம் ஒப்புதலும் பெற்றது. இந்த விவகாரத்தில் இந்தியா முறையான நடவடிக்கையுடன் முற்பட்டால், நீரவ் மோடியைக் கைது செய்யலாம் என்று சீனா கூறியது. இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் குற்றம் செய்து வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்றால் சர்வதேச போலீசார் அவரைத் தேடும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.எனவே, இவ்வாறு அறிவிக்க வைக்கத் தேவையான முயற்சிகளை சி.பி.ஐ. கையாண்டு வருகிறது.
இந்தியா-ஹாங்காங் இடையே 1997-ம் ஆண்டு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் அவரைக் கைது செய்து ஒப்படைக்கும்படி இந்திய அரசி ஹாங்காங்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது ஹாங்காங்கில் நிரவ்மோடி எங்குப் பதுங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை. எப்படியாவது ஹாங்காங்கில் வைத்தே அவரைக் கைது செய்து கொண்டு வர வேண்டும் என்று அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையை அறிந்து கொண்ட நீரவ் மோடி கைதாவதில் இருந்து தப்பிக்க ஹாங்காங்கை விட்டு வேறு நாட்டுக்குத் தப்பி செல்லத் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளது.
இந்திய அரசு ஹாங்காங்குக்கு விடுத்த வேண்டுகோள் 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே, அதற்குள் கைது செய்து ஆக வேண்டும். நிரவ் மோடியை கைது செய்து ஒப்படைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சி.பி.ஐ. போலீசார் காத்து இருக்கிறார்கள்.