ஜம்மு மேம்பாட்டு ஆணையம் (JDA) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான நிர்மல் சிங் மற்றும் அவரது மனைவி மம்தா சிங் ஆகியோருக்கு சொந்தமான நக்ரோடாவில் உள்ள ராணுவ வெடிமருந்து துணை கிடங்கு அருகே பான் கிராமத்தில், தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பங்களாவை இடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 8 தேதியிட்ட இடிப்பது தொடர்பான உத்தரவில், "இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் உங்களுக்குச் சொந்தமான சட்டவிரோத கட்டமைப்பை அகற்ற வேண்டும்" என்று ஆணையம் இருவருக்கும் உத்தரவிட்டது.
"குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் சட்டவிரோத கட்டுமானத்தை அகற்றத் தவறினால், அது ஜேடிஏவின் அமலாக்கப் பிரிவால் இடிக்கப்படும், மேலும் அகற்றுவதற்கான செலவு நில வருவாய் நிலுவைத் தொகையாக உங்களிடமிருந்து வசூலிக்கப்படும்" என்று ஜம்மு கட்டிட செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு ஆணையம், பிறப்பித்த உத்தரவு கூறுகிறது.
நிர்மல் சிங்கை தொடர்பு கொண்டபோது, இடிப்பதற்கான உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தனது வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.
"ஜே & கே கன்ட்ரோல் ஆஃப் பில்டிங் ஆபரேஷன் சட்டம், 1988ன் பிரிவு 7(1)ன் கீழ், உங்களுக்கு வழங்கப்பட்ட show cause நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த அலுவலகம் இதுவரை எந்த பதிலும் பெறவில்லை" என்று அந்த உத்தரவு சுட்டிக்காட்டுகிறது. மேலும், சட்டத்தின் 12(1) மற்றும் 12(2) பிரிவுகளின் கீழ், கட்டுமானத்தை நிறுத்தவும், அகற்றவும் கோரி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஜேடிஏ மூத்த அதிகாரி ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில், “கட்டமைப்பை இடிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடையும் வரை காத்திருந்து, கட்சி என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதைப் பார்ப்போம்,” என்றார்.
தான் "தனிமைப்படுத்தப்பட்டதாக" கூறும், நிர்மல் "இதை அரசியலாக்குவது சிலரின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது." என்றார்.
தனது அரசியல் போட்டியாளர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், “ஜம்முவில் இன்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படுகின்றன, ஆனால் என் பங்களா பிரச்சனைக்கு பின்னால் ஒரு ஜிஹாதி குழு ஒன்று உள்ளது. (NC தலைவர்கள்) ஃபரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவின் வீடுகள் பதிந்தியில் எப்படி வந்தது என்பதை அவர்கள் பார்க்கவில்லை. சட்டத்தின் ஆட்சி இருக்க வேண்டும், ஆனால் நான் ஏன் தனிமைப்படுத்தப்படுகிறேன்?’’ என்று நிர்மல் சிங் கூறினார்.
நிர்மல் சிங் குற்றச்சாட்டுகள் குறித்து விவரிவாக எதுவும் தெரிவிக்கவில்லை அல்லது அவர் குறிப்பிடும் "ஜிஹாதி குழு" பற்றிய எந்த விவரங்களையும் வழங்கவில்லை.
நிர்மல் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜூலை 23 அன்று 2,000 சதுர மீட்டர் நிலத்தில் புதிதாக கட்டப்பட்ட தங்களுடைய பங்களாவில் குடியேறியதாக ஆகஸ்ட் 13 அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், செய்தி வெளியிட்டது.
மே 2018 உத்தரவில் ராணுவ பாதுகாப்புப் பணி இடங்களில் இருந்து 1,000 கெஜம் இடைவெளிக்குள் பொது மக்கள் கட்டுமானங்களைக் கட்டுவதைத் தடுக்கும் 2015 அரசாங்க அறிவிப்பை "கண்டிப்பாக செயல்படுத்துவதை" உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தும் உத்தரவை மீறி இந்த கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது.
ராணுவ துணைக் கிடங்கின் சுற்றுச்சுவரில் இருந்து வெறும் 580 கெஜம் தொலைவில் பங்களா கட்டுவதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நக்ரோட்டாவை தளமாகக் கொண்ட 16 கார்ப்ஸ் தலைமையகத்தில் உயர் ராணுவ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தும் சிவில் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கட்டுமான பணிகளை நிறுத்தாததால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
2017 அக்டோபரில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, பாதுகாப்புச் சட்டம், 1903 ஐ மீறுவதாகக் கூறி, ராணுவம் அப்போதைய ஜம்மு துணை ஆணையரிடம் கடிதம் மூலம் காவல்துறை மற்றும் சிவில் நிர்வாகத்தை கட்டுமானத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை முதல்வராக நிர்மல் சிங் இருந்தார். அவர் ஏப்ரல் 30, 2018 வரை பதவியில் இருந்தார்.
இந்த ஆண்டு செப்டம்பர் 26 அன்று, முசாபர் அலி ஷான் என்ற வழக்கறிஞர் ஒருவரின் RTI கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, யூனியன் பிரதேச நிர்வாகம் நிர்மல் சிங்கின் பங்களாவை "சட்டவிரோத" கட்டுமானம் என்று குறிப்பிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.