இன்றைய தினம் (பிப் 1) 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது, திருக்குறளை மேற்கொள் காண்பித்து நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, பா.ஜ.க தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். முன்னதாக, கடந்த ஜூலை 23-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறித்து நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வைத்து நிர்மலா சீதாரமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
குறிப்பாக, "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி" என்ற திருக்குறளை மேற்கோள் காண்பித்து நிர்மலா சீதாராமன் தனது உரையை நிகழ்த்தினார்.
இந்த திருக்குறளுக்கான அர்த்தத்தை பொதுமக்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். அதன்படி, "உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்" என மு. வரதராசனார் இந்த திருக்குறளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், "உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது" என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்த குறளுக்கு உரை எழுதியுள்ளார்.