Nirmala Sitharaman defends Rafale Shastra Puja by Rajnath: பிரான்சில் முதல் ரஃபேல் ஜெட் விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியின்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானத்துக்கு ஆயுத பூஜை நடத்தியது சரிதான் என்றும் அது இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளர்.
அக்டோபர் 8 ஆம் தேதி, விஜய தசமி தினத்தன்று ரஃபேல் விமானம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங், புதிதாக ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்தில் பாரம்பரிய ஆயுத பூஜை செய்தார். அப்போது அவர் விமானத்தில் ஓம் என்று எழுதினார். மேலும், விமானத்தின் சக்கரங்களில் எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டன. பூக்கள் தூவப்பட்டது. இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் பலவாராக விவாதிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காக அரசு வாங்கும் போர் விமானத்தில் மதச்சார்பற்ற நாட்டில் ஒரு பாதுகாப்பு அமைச்சர் இந்து மதத்தின் ஆயுத பூஜையை செய்வது தவறு என்று விமர்சித்தும் அது சரிதான் என்று ஆதரவு தெரிவித்தும் சமூக ஊடகங்கள் விவாதங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புனேவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் ராஜ்நாத் சிங் ரஃபேல் விமானத்துக்கு ஆயுத பூஜை செய்தது சர்ச்சையானது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் “அதில் என்ன தவறு இருக்கிறது? அதை நீங்கள் கண்மூடித்தனமான நம்பிக்கை என்று நினைத்தால், நீங்கள் நம்பிக்கொள்ளுங்கள். விஜய தசமி நாளில் அவர் விமானத்தில் ஓம் என்று எழுதியதில் என்ன தவறு இருக்கிறது? இதே போன்ற நிகழ்வுகள் இதற்கு முந்தைய நிகழ்வுகளிலும் மற்ற நாடுகளிலும் நடைபெற்றுள்ளது. நீங்கள் அதை கண்மூடித்தனமான நம்பிக்கை என்று அழைக்கலாம். அதைப் பற்றி கவலை இல்லை. அவர்களுடைய நம்பிக்கையை அவர்களைச் செய்யவிடுங்கள். இந்த நாட்டில் இந்த விஷயங்களுக்கு அவர்களுக்கு முக்கியத்துவம் உள்ளது. அவர் செய்தது சரிதான் என்று நினைக்கிறேன்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் பொருளாதார நல்வாழ்வுக்கும், ஆழ்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கும் பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், பெருநிறுவன வரி மீதான நடவடிக்கை மாற்றங்களைச் செயல்படுத்துவது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்திற்கு சான்றாகும் என்றும் கூறினார்.
இது பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், “”ஆழ்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பட்ஜெட்டுக்குப் பிறகு, ஒவ்வொரு வாரமும் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளேன். அவை தற்காலிகமாக சிக்கல்களைத் தளர்த்துவதற்காக மட்டுமல்ல. எடுத்துக்காட்டாக, கார்ப்பரேட் வரி குறைப்பு ஒரு முழுமையான கட்டமைப்பு மாற்றத்துடன் வந்தது. நீங்கள் ஒரு வரியில் இணையும் ஒரு அமைப்பை நாங்கள் வழங்கினோம். மேலும் எந்தவொரு விலக்குமின்றி ஒரு குறிப்பிட்ட அளவிலான வரியை செலுத்துகிறோம். அது சரியாக இருந்தது. ஆழ்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்துள்ளது என்பது பிரதமரால் மட்டுமே இந்த மாதிரி தைரியமான நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.