வீடு, கார் வாங்கும்போது கட்டப்படும் தவணைத்தொகையின் வீதம் குறைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையில் இடம்பெற்றிருந்தன.
நாட்டின் பொருளாதாரம் மந்தமாக உள்ளதாக எழுந்த தகவலைத் தொடர்ந்து, அதற்கு விளக்கம் அளிக்கும் பொருட்டு டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது, சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தமாக உள்ளது. உலக பொருளாதார மந்தம் என்பது ஒன்றும் புதிது அல்ல. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனாவை விட இந்தியா பொருளாதாரம் நன்றாக உள்ளது. மந்த நிலை என்ற தகவல் தவறானது.
வருமான வரி தாக்கல் அதிகரித்துள்ளது. இந்திய வரி வருமானம் பெருகி உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு ஆய்வுகள் நடத்தி துணிச்சலான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த சீர்திருத்த நடவடிக்கை தொடரும். ஜிஎஸ்டி முறையில் உரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். கம்பெனிகள் பலன் பெறும் வகையில் கார்பரேட் நிறுவனங்களுக்கான சட்ட திருத்தங்களில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள், மற்றும் வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் பெருக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எளிய முறையில் வருமான வரி தாக்கல் செய்ய எலக்ட்ரானிக் ஆன்லைன் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அக். 1 முதல் வருமான வரித்துறையில் குற்றம் இழைத்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலமே சம்மன், நோட்டீஸ் அனுப்பப்படும்.
தொழில் முனைவோருக்கான கடன் பெறும் வழிகள் எளிமைப்படுத்தப்படும். வங்கி மூலம் கடன் பெறுவோர் எளிய முறையில் வங்கிகளை அணுக முடியும். ஆன்லைன் மூலம் கடன் விண்ணப்பிப்போருக்கு விரைவில் கடன் வழங்கப்படுகிறது. கடன் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். கடனுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.
வீடு ,கார் வாங்கும் தவணை குறைக்கப்படும். வங்கிகளுக்கு கூடுதலாக மூல நிதி ரூ. 5 லட்சம் கோடி வழங்கப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிதியில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 70 ஆயிரம் கோடி உடனடியாக வழங்கப்படும். வங்கிகள் ஒரு முறைக்கு மேல் ஆதாரை கேட்க கூடாது என உத்தரவிட்டுள்ளோம். ரெப்போ விகித்துடன் கடன் இணைக்கப்படும். வட்டி விகிதங்களை வங்கிகளே மாற்றுவதால் கடனுக்கான வட்டி குறையும். ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை தொடர்பாக 30 நாட்களில் முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளோம்.
சிஎஸ்ஆர் பங்களிப்பை அளிக்காத நிறுவனங்கள் மீது சிவில் நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும். கிரிமினல் நடவடிக்கை கிடையாது. ஜிஎஸ்டி வழிமுறைகள் இன்னும் எளிமைப்படுத்தப்படும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரியில் சலுகைகள் வழங்கப்படும். ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும்.பழைய வாகனங்களை புதிய வாகனங்களாக மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்படும்.கடனை அடைத்த 15 நாட்களில் சம்பந்தபட்டவர்களுக்கு ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.