மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல், வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
அவர் கூறுகையில், "நாட்டின் பணவீக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. தொழில்துறையில் உற்பத்தி அதிகரித்து பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தென்படுகின்றன.
வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்புப் பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. உற்பத்திக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக வரும் 19ம் தேதி பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.
ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி பொருட்கள் மீதான கட்டணங்களை நீக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி துறையை ஊக்குவிக்கும் வகையில் துபாயில் நடப்பதைப் போன்று, 2020ம் ஆண்டு இந்தியாவில் மெகா ஷாப்பிங் விழா நடத்தப்படும்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் வீட்டு திட்டங்கள், வங்கிகளின் நடவடிக்கைகளால் பாதியில் நிற்கும் வீட்டுவசதித் திட்டங்கள் ஆகியவற்றை விரைந்து முடிக்க தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினர், அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் திட்டங்கள் இந்த சலுகைக்குள் கொண்டுவரப்படும். இதன்மூலம் சொந்த வீடு கட்டும் அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவு உள்ளது. வரி செலுத்தும் முறையில் சிறிய தவறுகள் இருந்தால் அதற்காக தண்டிக்கப்பட மாட்டார்கள். ஜனவரி 1ம் தேதி முதல் ஏற்றுமதி வரியில் சுங்க வரி நீக்கப்படும். இந்த திட்டத்தால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் உட்பட பல துறையினர் பயன்பெறுவார்கள்.
சிறு, குறு தொழில்களுக்கான ஏற்றுமதி ப்ரீமியம் மிகக் குறைவாக நிர்ணயிக்கப்படும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி அடுத்த காலாண்டில் மேம்படும், அதற்கு ஒரு குறிப்பிட்ட இலக்கை வைக்க விரும்பவில்லை" என்றார்.
மத்திய நிதியமைச்சரின் பேட்டியின் 10 முக்கிய அம்சங்கள்
* அந்நிய செலாவணி இருப்பு ஆகஸ்ட் இறுதியில் அதிகரித்துள்ளதால், அந்நிய நேரடி முதலீடு வலுவான, புத்துயிர் பெறுவதற்கான அறிகுறியாகும்.
* பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது, இது 3 முதல் 6 சதவீதம் வரை வைக்கப்படுகிறது, பெரும்பாலும் 4% ஆக இருக்கும்.
* ஆண்டு மற்றும் காலாண்டு நிலையான முதலீட்டு விகிதங்கள் புத்துயிர் பெறுகின்றன.
* அடுத்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மேம்படும், அதற்கு ஒரு எண்ணை வைக்க மாட்டேன்.
* ஏற்றுமதியாளர்களை உற்சாகப்படுத்த துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்வைப் போலவே, நாடு முழுவதும் நான்கு இடங்களில் இந்தியா ஒரு மெகா ஷாப்பிங் திருவிழாவை நடத்த உள்ளது.
* சீதாராமன் பொதுத்துறை தலைவர்களை செப்டம்பர் 19 அன்று சந்திப்பார்.
* ஏற்றுமதியில் MEISக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படும் RoTDEP-ஐ அதிகரிப்பதற்காக நிதியமைச்சர் ஆறு ஆலோசனைகளை அறிவித்தார்.
* கட்டணங்கள் மற்றும் நிதித் தரவுகளை கண்காணிப்பதற்காக அமைச்சர்கள் இடையிலான குழுக்களை நிறுவுதல்.
* மலிவு வீடுகளைத் தேடும் நடுத்தர வருவாய் மக்களுக்கு, ஒரு சிறப்பு சாளரம் அமைக்கப்பட வேண்டும், இது மக்களுக்கு உதவ வங்கி மற்றும் நிதி அனுபவமுள்ள நிபுணர்களைக் கொண்டிருக்கும்.
* வங்கிகளின் நடவடிக்கைகளால் பாதியில் நிற்கும் வீட்டுவசதித் திட்டங்கள் ஆகியவற்றை விரைந்து முடிக்க தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.