மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் 4-வது கட்ட அறிவிப்பை வெளியிட்டார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை 4வது நாள் செய்தியாளர்கள் சந்திப்பில், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி இன்றைய அறிவிப்பு இருக்கும் என்று கூறினார். இந்தியா சுய சார்பு அடைய உலக சந்தையில் கடுமையான போட்டிக்கு நாடு தயாராக இருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
நிலக்கரி, தாதுக்கள், பாதுகாப்பு உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், விமானம் பழுது பார்த்தல் பராமரிப்பு, யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் விண்வெளி துறை ஆகிய 8 துறைகளில் மாற்றங்களை அறிவிக்க உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பல துறைகளி கொள்கையை எளிமைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் கூறினார். வலிமையான முறையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் பிரதமருக்கு மிகச் சிறந்த வெற்றி அனுபவம் உள்ளது.
நிலைக்கரித்துறை அறிவிப்புகள்
நாட்டின் நிலக்கரி துறையில் வணிக சுரங்கத்தை அரசாங்கம் கொண்டு வருகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். நிலக்கரி சுரங்கத்தில் அரசாங்கத்தின் முற்றுரிமை நீக்கப்பட உள்ளது. நிலக்கரி ஒரு டன்னுக்கு உறுதியான விலை என்பதற்கு பதிலாக வருவாய் பகிர்வு அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். எந்தவொரு தனியார் நிறுவனமும் நிலக்கரித் தொகுதியில் ஏலம் எடுத்து திறந்த சந்தையில் விற்கலாம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்தியா மூன்றாவது பெரிய நிலக்கரி கிடைக்கும் நாடாக இருக்கிறது. ஆனால், இந்தியா இன்னும் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. இதன் காரணமாக வளர்ந்து வரும் துறைகள் மூலப்பொருள் கிடைக்காததால் பாதிக்கப்படுகின்றன. பற்றாக்குறை இருக்கும்போதுதான் விதிமுறைகள் தேவை. ஆனால், இந்தியாவில் ஏராளமான நிலக்கரி உள்ளது என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
மேலும், நிலக்கரி சுரங்கம், மீத்தேன் வாயு திட்டம் தனியாக ஏலம் விடப்படும். உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.50,000 கோடி வழங்கப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சுரங்கத்துறை அறிவிப்புகள்
சுரங்கத் துறைக்கு ஊக்கமளிப்பதே அவர்கள் கொண்டு வர விரும்பும் துறை சீர்திருத்தம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதனால், ஒரு தடையற்ற கலப்பு சுரங்க ஆய்வு மற்றும் உற்பத்தி முறைக்கு வழிவகுக்கும். வெளிப்படையான மற்றும் திறந்த ஏலமுறையின் மூலம் 500 சுரங்கத் தொகுதிகள் வழங்கப்படும்.
தாதுக்கள் சுரங்கத்திற்கான துறைசார் சீர்திருத்தம் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை குறிப்பாக ஆய்வில் கொண்டு வரும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
பாதுகாப்பு உற்பத்தி துறைக்கான அறிவிப்பு
பாதுகாப்பு உற்பத்தியில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஒப்பந்த நிர்வாகத்தை ஆதரிப்பதற்காக திட்ட மேலாண்மை அலகு (பி.எம்.யூ) அமைப்பதன் மூலம் அரசாங்கம் காலவரையறை பாதுகாப்பு கொள்முதல் மற்றும் விரைவான முடிவெடுத்தலையும் தொடங்கும். இது பொது பணியாளர்களுக்கு தேவையான தரமான ஆயுதங்கள், தளவாடாங்கள், முழுமையான பழுதுபார்த்தல் சோதனை மற்றும் சோதனைநடைமுறைகள் ஆகியவற்றின் யதார்த்தமான அமைப்பை உறுதி செய்யும்.
இறக்குமதி செய்ய தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்/ தளவாடங்களின் பட்டியலை அரசாங்கம் அறிவிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதுபோன்ற பொருட்களை இந்தியாவில் இருந்து மட்டுமே வாங்க முடியும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியல் அதிகரிக்கப்படும். இராணுவ விவகார துறையுடன் கலந்தாலோசித்த பின்னரே இது அறிவிக்கப்படும். உள்நாட்டு மூலதன கொள்முதல் செய்வதற்கு தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும், இது பாதுகாப்புத்துறை ஆயுதங்கள், தளவாடங்களை இறக்குமதி செய்யும் மசோதாவைக் குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
சிவில் விமானத் துறைக்கான அறிவிப்பு
இந்தியாவின் வான்வெளியில் 60 சதவீதம் மட்டுமே இலவசமாகக் கிடைக்கிறது. இதனால், பயணிகள் பெரும்பாலான இடங்களுக்கு சுற்றுவழியாக சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால், விமான செயல்பாட்டுக்கு அதிக எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், வான்வெளி பயன்படுத்துவதற்கான தளர்வுகளை அறிவித்து வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்துவதை முடிவுக்கு கொண்டுவருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்திய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. இதனால், பொதுமக்கள் விமானங்கள் பறப்பது மிகவும் எளிதாகிறது. இது ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி நன்மையைத் தரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தனித்தனியாக, பொதுத்துறை தனியார்-கூட்டு (பிபிபி) மாதிரியின் கீழ் மேலும் 6 விமான நிலையங்கள் இப்போது ஏலத்திற்கு விடப்படும் என்று நிதியமைச்சர் கூறினார். சிறந்த உலகத் தரம் வாய்ந்த வசதிகளுக்காக 12 விமான நிலையங்களில் கூடுதல் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) ரூ.2,300 கோடி செலுத்தும் என்று அவர் கூறினார். 12 விமான நிலையங்களில் முதல் மற்றும் இரண்டாம் சுற்று முதலீட்டிற்கு ரூ.13,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதன்கிழமை முதல் நாள் அறிவிப்பில், சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு 6 நடவடிக்கைகள், ஈ.பி.எஃப்-க்கு இரண்டு, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்கள் துறைக்கு 2 நடவடிக்கைகள், டிஸ்கம்களுக்கு ஒன்று, ஒப்பந்தக்காரர்களுக்கு ஒன்று, ரியல் எஸ்டேட் துறைக்கு 3 நடவடிக்கைகள் மற்றும் 3 வரி நடவடிக்கைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
நிர்மலா சீதாராமனின் 2வது நாள் வியாழக்கிழமை, அறிவிப்பில், மத்திய - மாநில பொது விநியோக முறையில் ரேஷன் அட்டைகள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு இலவச உணவு தானியம் விநியோகம் வழங்கப்படும் என்று கூறினார். வெள்ளிக்கிழமை, 3வது நாள் அறிவிப்பில், அவர் மொத்தம் 11 நடவடிக்கைகளை அறிவித்தார். அவற்றில் 8 சிறந்த திறன்களை உருவாக்குவதையும், சேமிப்பு மற்றும் தளவாடங்களை அதிகரிப்பதற்கான ஒதுக்கீட்டையும் நோக்கமாகக் கொண்டது. மீதமுள்ள 3 ஆளுகை மற்றும் நிர்வாகம் தொடர்பான சீர்திருத்தங்கள் ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.