/tamil-ie/media/media_files/uploads/2020/05/image-11.jpg)
Finance Minister Announcements: கொரோனா பெருந்தொற்றால் முடங்கிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒட்டுமொத்த சிறப்புப் பொருளாதாரத் திட்டமாக ரூ. 20 லட்சம் கோடி, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கொண்ட திட்டத்தைக் கடந்த மே 12ஆம் தேதி நரேந்திர மோடி அறிவித்தார். அத்துடன், தற்சார்பு இந்தியா பிரகடனம் (ஆத்ம நிர்பார் பாரத் அபியான் ) என்ற கோட்பாட்டையும் அறிவித்தார்.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று மூன்றாவது கட்ட நடவடிக்கையாக விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளில் 11 நலத்திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
இந்த 11 நலத்திட்ட அறிவிப்புகளில், எட்டு அறிவிப்புகள் விவாசய உள்கட்டமைப்பு, தளவாடங்கள், விவசாய பொருட்கள் சேமிப்பகத்தை வலுப்படுத்துகிறது. மீதமுள்ள மூன்று அறிவிப்புகள், விவசாயத் துறையில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி பேசுகிறது.
விவசாய உற்பத்திப் பொருட்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேளாண் கட்டமைப்பு நிதியாக ரூ.ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு , குறு உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடியிலான திட்டம்; கடல் மற்றும் உள்நாட்டு மீன்வள மேம்பாட்டுக்காக ரூ .20,000 கோடி பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா திட்டம்; பால் வளத்தைப் பெருக்குவதற்கும், பால் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கவும் விதமாக கால்நடை வளர்ப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூபாய் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, அனைத்து வகையான கால்நடைகளுக்கும் 100% தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்யும் விதமாக தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 340 கோடி ரூபாய் ஒதுக்கீடு, 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகை பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் 4000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பு முன் முயற்சிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு போன்ற நலத்திட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
மேலும், விளை பொருளை வினியோகம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே தக்காளி, வெங்காயம் மற்றும் உருளை பயிருக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் (ஆபரேஷன் கிரீன்) தற்போது காய்கள், பழங்கள் என அனைத்து பயிர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
அறிவிக்கப்பட்ட மூன்று சீர்த்திருத்தங்கள்:
முதலாவதாக, வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன்மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை ஆகியவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும் சூழல் உருவாகும். தேசிய பேரிடர் அல்லது பஞ்சம் ஆகியவற்றால் விலை ஏற்றம் ஏற்படும்போது மட்டுமே விவசாய உற்பத்தி பொருட்கள் மீதான கையிருப்பு அளவை கட்டுப்படுத்துவது குறித்த விதிமுறைகள் வெளியிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இரண்டாவதாக, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கவர்ச்சிகரமான விலையில் விற்பதற்கான வசதிகளை உருவாக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் தடையை நீக்கவும், வேளாண் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தவும் சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்தார்
கடைசியாக, பதப்படுத்துவோர், திறனாளிப்போர், பெரு வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், ஆகியோருடன் நியாயமான வெளிப்படையான முறையில் விவசாயிகள் தொடர்பு கொள்ள சட்ட ரீதியிலான கட்டமைப்பு உருவாக்கப்படும். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல்உறுதியான வருமானத்திற்கு வழி வகுப்பதுடன் தர நிர்ணயித்திற்கும் இந்த கட்டமைப்ப்பு வழிவகுக்கும் என்று சீதாராமன் கூறினார்.
முன்னதாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், புலம்பெயர்ந்த நகர்ப்புற ஏழைகள், சுய தொழில் செய்யும் சிறு வர்த்தகர்கள், சிறு விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோரைப் பொருளாதார நிலையில் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நிர்மலா சீதாராமன் நேற்று (மே 14 வியாழன் அன்று) அறிவித்தார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் எந்த மூலையிலும் இருக்கும் நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பண்டங்களை வாங்குவதற்கு வசதியாக அடுத்த ஆண்டு (2021) மார்ச் முதல் அமலுக்கு வரும் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் தொழில்நுட்ப முறையை உருவாக்குதல் , புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய வாடகை வீட்டுவசதிக் குடியிருப்புகள் திட்டம் தொடங்குதல், தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 5000 கோடி கடனுதவி, விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலமாக ரூ.30,000 கோடி கூடுதல் அவசர பணி மூலதனம் (Additional Emergency Working Capital) போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.