இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Parliament Winter Session Day 18 LIVE Updates: ‘One Nation One Election’ Bill introduced in Lok Sabha after division voting
இன்றைய தினம் (டிச 17) மக்களவையில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், மானியங்களுக்கான கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது, நாட்டின் நிதிநிலை தொடர்பாக பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்தார். குறிப்பாக, இந்தியா "நிலையான மற்றும் நீடித்த" வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 8.3 சதவீதமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக நாடாக இந்தியா தொடர்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது காலாண்டில், "தற்காலிக பின்னடைவு" மட்டுமே ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், வரும் காலாண்டுகளில் பொருளாதாரம் சீரான வளர்ச்சியை காணும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், உற்பத்தி துறையில் பரந்த அடிப்படையிலான மந்தநிலை தற்போது இல்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பாதிக்கும் மேற்பட்ட துறைகளில் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் வலுவாக இருப்பதாக அவர் தகவலளித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் முதல் (ஏப்ரல்-ஜூன்) காலாண்டில் 6.7 சதவீதமும், ஜூலை-செப்டம்பர் காலத்தில் 5.4 சதவீதமும் வளர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பணவீக்கத்தை தற்போதைய ஆட்சி சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளதாகவும், முந்தைய ஆட்சியில் அது இரட்டை இலக்கத்தை தொட்டது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல்-அக்டோபர் 2024-25 இல் சில்லறை பணவீக்கம் 4.8 சதவீதமாக இருந்ததாகவும், இது கோவிட் தொற்றுக்கு பிறகு மிகக் குறைவாக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவு குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் 6 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், தற்போது, 3.2 சதவீதமாக குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“