Sunny Verma , P Vaidyanathan Iyer
கொரோனா தொற்று பாதிப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் மாநில அரசுகளின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதினால், மத்திய அரசு, செலவு பங்கீடு விவகாரத்தில் முக்கிய நடவடிக்கைகளை துவக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சுயசார்பு இந்தியா திட்டத்திற்காக, பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 5 கட்டமாக பத்திரிகையாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்த 5 கட்ட அறிவிப்பிற்கு பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, இந்த அறிவிப்புகளினால் மட்டுமே நாம் நின்றுவிடப்போவதில்லை. இனிதான் துரித வேகத்தில் செயல்பட இருக்கிறோம். புதிய திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். நாங்கள் ஏதோ முடித்துவிட்டதை போன்று சிலர் பேசி வருகின்றனர்.,நாங்கள் இப்போது தான் துவங்கியிருக்கிறோம்.
கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் பேசி வருகின்றனர். இந்த 2020-21ம் நிதியாண்டு தற்போது தான் துவங்கியுள்ளது. இன்னும் 10 மாதங்கள் உள்ளன, இந்த நிதியாண்டு முடிவடைய, அதற்குள் இந்த அரசு என்னவெல்லாம் செய்ய உள்ளது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
நாங்கள் எங்கள் நலனில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனின் மீது அக்கறை கொண்டுள்ளோம். அதற்காகவே, புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளோம். புதிய அறிவிப்புகளை தக்க சமயத்தில் தான் அறிவித்துள்ளோம். இப்போது இருந்து அதை செயல்படுத்த துவங்கி மாபெரும் வெற்றியை பெறுவோம் இதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் என்று தெரிவித்தார்.
முன்னதாக, கொஜென்சிஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், தற்போதுள்ள பொருளாதார நிலையை மேம்படுத்தும் பொருட்டு, கூடுதல் பணத்தை அச்சிடுவது குறித்து ரிசர்வ் வங்கி எவ்வித ஆலோசனையையும் மேற்கொள்ளவில்லை. நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைந்து பொருளாதாரத்தை இக்கட்டிலிருந்து மீ்ட்கும் நடவடிக்கைகளிலேயே நாங்கள் முழுக்கவனமும் செலுத்தி வருகிறோம். பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறியிருந்தார்.
1997ம் ஆண்டில், மத்திய அரசு கடும் நிதிநெருக்கடியில் சிக்கி இருந்தபோது, அரசு தான் வைத்திருந்த செக்யூரிட்டிகளை விற்று, ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெற்றது. ஆனால், அதுபோன்றதொரு நிலை தற்போது ஏற்படவில்லை. இருந்தபோதிலும்,நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பணமதிப்பு தற்போது இல்லாதநிலையில், கூடுதலாக பணத்தை அச்சடித்துக்கொள்ள அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நிதிநிலைமை குறித்து நிதியமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தான் கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன். முழுசாக இன்னும் 3 மாதம் கூட முடியாத நிலையில், அதை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பலர் எழுப்பிய வண்ணம் உள்ளனர். நாங்கள் இதை செயல்படுத்தவே துவங்கியுள்ளோம். அதற்குள் அது முடிந்துவிட்டதாக தெரிவிப்பது எவ்விதத்தில் நியாயம்.
நாட்டின் கடன் விவகார நெறிமுறைகளை நாங்கள் மாற்றியமைக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். அதை செயல்படுத்தும்போதுதான் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அறிந்துகொண்டோம்.எனவே அதுதொடர்பான ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு வருகிறோம். பொருளாதார சீர்குலைவை தடுத்தும்வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நடவடிக்கைகளின் மூலம், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP) 1.1 சதவீதத்திற்கும் கீழ் குறையும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பிட்டிருந்தது குறித்த கேள்விக்கு, இந்த நாட்டில் யார் வேண்டுமேனாலும் ஆய்வு மேற்கொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது. நாங்கள் எதையும் பொதுமக்களிடமிருந்து மறைக்க விரும்பியதில்லை. நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். அதன் விளைவுகளை நீங்களே பார்க்கப்போகிறீர்கள். விரைவில் பணப்புழக்கம் மக்களிடையே அதிகரிக்கப்போகிறது நீங்கள் பட்ஜெட்டில் எதிர்பார்த்த உங்களது எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேறத்தான் போகிறது. மத்திய அரசு, நிதியமைச்சகம், மக்களின் வரிப்பணத்தை மூலதனமாக கொண்டு இயங்கி வருகிறது, இந்த விவகாரத்தில் நாங்கள் முழு வெளிப்படைத்தன்மையுடன் இயங்கி வருகிறோம்.
புலம்பெயரும் வடமாநில தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ரூ.3 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து எழுந்துள்ளன. இந்த கோரிக்கைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். ஆனால், நான் அப்போது கூறிய பதிலையே தற்போதும் கூற விரும்புகிறேன். அவர்களுக்கு போதுமான நிதியுதவிகளை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அவர்கள் வங்கிகளுக்கு சென்று கேட்காமல், எங்களையே கேட்டுக்கொண்டிருப்பது எவ்விதத்தில் நியாயம். வங்கிகளுக்கு சென்று அவர்களுக்கு தேவையான தொகையை நிதியுதவியாகவோ அல்லது கடனாகவோ அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்குமேல் மத்திய அரசால் என்ன செய்ய முடியும்?.
அத்தியாவசியம் அல்லாத செலவுகளை கட்டுப்படுத்துவதில் மிகுந்த அக்கறை மேற்கொண்டுள்ளோம். கொரோனா வைரஸ் தொற்று துவங்குவதற்கு முன்னரே, நிதித்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை துவக்கிவிட்டது. தற்போது நாங்கள் பொருளாதார சீரமைப்பிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கான நடவடிக்கைகளையும் படிப்படியாக துவக்கிவிட்டோம். தற்போது அதன் வேகம் மெதுவாக இருந்தபோதிலும், விரைவில் பலன் தரும் என்று நம்புகிறோம். இந்த நடவடிக்கைகளை நிதித்துறை மிக உன்னிப்பாக கவனிப்பது மட்டுமல்லாமல் செயல்படுத்தியும் வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.