நீத்தா அம்பானி கேரளத்திற்கு நிதி உதவி : கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையில் இருந்து மெல்ல மெல்ல மீண்டெழுகிறது கேரளம். அம்மாநில மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைத்து செய்து வருகிறார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.
பல்வேறு மாநில அரசுகள் தங்களால் இயன்ற நிதி உதவியினை கேரள அரசிற்கு செய்து வருகிறார்கள். அப்படியான சூழலில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீத்தா முகேஷ் அம்பானி நேற்று (30/08/2018) கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
வெள்ள பாதிப்பு குறித்து சிறப்புச் சட்டமன்ற கூட்டத்தில் பினராயி விஜயன் தாக்கல் செய்த அறிக்கைப் பற்றி படிக்க
முகாம்களில் நீத்தா அம்பானி
நேற்று கேரளம் வந்த நீத்தா அம்பானி வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பின்பு முகாம்களில் தங்கி இருப்பவர்களை நேரில் பார்த்து நிவாரணப் பொருட்களை வழங்கினார் நீத்தா.
மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்த நீத்தா 21 கோடி ரூபாய் நிவாரண நிதியையும், 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும் அறக்கட்டளையின் சார்பாக வழங்கினார் நீத்தா.
துணிகள், சமையலுக்குத் தேவையான பொருட்கள், பேனா, நோட்டு புத்தகங்கள், மருந்துப் பொருட்கள், மற்றும் காலணிகள் நிவாரணப் பொருட்களாக வழங்கப்பட்டன.
நீத்தா அம்பானியை வரவேற்ற பினராயி விஜயன்
இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நீத்தா அம்பானி “கேரளா உலகத்திற்கே சிறந்த முன்மாதிரி, இக்கட்டான கால கட்டங்களில் ஒருவரை ஒருவர் அரவணைத்து பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
ஒவ்வொரு முறையும் இந்த கேரளத்தின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்து வியந்ததுண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களை மிக விரைவாக கட்டி முடிக்க உதவிகள் செய்யப்படும் என்றும், கேரளாவை மீட்டெடுக்க அனைவரும் சேர்ந்து உதவுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.