மத்திய அரசு நேற்று (செவ்வாய்கிழமை) நிதி ஆயோக் அமைப்பை மறுசீரமைப்பு செய்தது. இதன் சிறப்பு அழைப்பாளர்களின் எண்ணிக்கையை 5-ல் இருந்து 11 ஆக உயர்த்தியது. பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக (special invitees) சேர்த்துள்ளது.
பா.ஜ.க கூட்டணி கட்சி அமைச்சர்கள் குமாரசாமி (JD-S), ஜிதன் ராம் மஞ்சி (HAM), ராஜீவ் ரஞ்சன் சிங் (JD-U), R நாயுடு (TDP) மற்றும் சிராக் பாஸ்வான் (LJP-ராம் விலாஸ்) ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக சேர்த்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், பொருளாதார நிபுணர் சுமன் கே.பெரி தொடர்ந்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானி வி.கே சரஸ்வத், விவசாயப் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், குழந்தை நல மருத்துவர் வி.கே பால் மற்றும் மேக்ரோ-பொருளாதார நிபுணர் அரவிந்த் விர்மானி ஆகியோர் அரசாங்க சிந்தனைக் குழுவில் முழுநேர உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். பிவிஆர் சுப்ரமணியம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அவருக்கு முன்பிருந்த நரேந்திர சிங் தோமருக்குப் பதிலாக, அதிகாரபூர்வ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற அதிகாரபூர்வ உறுப்பினர்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அடங்குவர்.
மேலும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்), ஜே.பி நட்டா (சுகாதாரம்), வீரேந்திர குமார் (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்), ஜுவல் ஓரம் (பழங்குடியினர் விவகாரம்), அன்னபூர்ணா தேவி (பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு) மற்றும் ராவ் இந்தர்ஜித் சிங் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பர்.
ஆங்கிலத்தில் படிக்க: Centre reconstitutes NITI Aayog, brings in allies as special invitees
முன்னதாக சிறப்பு அழைப்பாளர்களாக இருந்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இந்த முறை பட்டியலில் இல்லை. முன்னதாக கட்கரி, வீரேந்திர குமார் மற்றும் ராவ் இந்தர்ஜித் சிங் ஆகியோர் ஏற்கனவே சிறப்பு அழைப்பாளர்களாக இருந்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சேர்க்கப்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மத்திய அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“