நிதி ஆயோக் (NITI Aayog) பணிக்குழு, இந்தியாவின் மண்ணில் கரிமப் பொருட்கள் குறைந்து வருவதைக் கண்டறிந்தது மற்றும் விவசாயத்தில் தாவர ஊட்டச்சத்து நிரப்பியாக பசுவின் சாணம் மற்றும் மாட்டு சிறுநீர் (கோமியம்) ஆகியவற்றைப் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.
நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் தலைமையிலான பணிக்குழு, ரசாயன உரங்களை மாட்டுச் சாணம் சார்ந்த கரிம உரங்களுடன் (பெட்ரோலியப் பொருட்களில் எத்தனால் கலப்பது போல) ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் பரிந்துரைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டபடி வந்து தாக்குதல்: காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் குழுவினர் புகார்
”கால்நடை பராமரிப்பு மையங்களின் (கௌசாலாக்கள்) பொருளாதார நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தும் கரிம மற்றும் உயிர் உரங்களின் உற்பத்தி மற்றும் ஊக்குவிப்பு" உள்ளிட்டவற்றை பணிக்குழு தனது அறிக்கையில் பரிந்துரைகளாக வழங்கியுள்ளது. இதனை வெள்ளிக்கிழமை ரமேஷ் சந்த் வெளியிட்டார்.
“இந்தியாவின் மண்ணில் கரிமப் பொருட்கள் குறைந்து வருகின்றன. கரிம உரம் மற்றும் பிற ஆதாரங்களை மண்ணில் பயன்படுத்துவதை அதிகரிக்காவிட்டால், நாடு கடுமையான நிலைத்தன்மை சவால்களை எதிர்கொள்ளும். மாட்டுச் சாணத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பது கௌசாலாக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இயற்கை விவசாயத்தை ஆதரிக்கவும் மற்றும் விவசாயத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் நீண்ட காலத்திற்கு உதவும். எனவே, பசுவின் சாணம் மற்றும் மாட்டு கோமியத்தை விவசாயத்தில் தாவர ஊட்டச் சத்துக்களாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். மேலும், உரம் விற்பனை மற்றும் உற்பத்தி முகமைகளை சில விகிதத்தில் கனிம மற்றும் கரிம உரங்களை விற்பனை செய்ய கட்டாயப்படுத்த புதுமையான பொறிமுறையை உருவாக்க வேண்டும், என்று அறிக்கை கூறுகிறது.
17 பேர் கொண்ட பணிக்குழுவில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் உறுப்பினர்கள் உள்ளனர்.
பணிக்குழு அறிக்கையின்படி, “கௌசாலாக்களால் உற்பத்தி செய்யப்படும் கரிம மற்றும் உயிர் உரங்களை சந்தைப்படுத்த பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களை கட்டாயப்படுத்தப்பட வேண்டும். மாட்டுச் சாணத்தை அடிப்படையாகக் கொண்ட கரிம உர ஆலைகளை அமைக்கவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
கௌசாலாக்களுக்கான ஊக்கத்தொகையைப் பரிந்துரைத்து, அறிக்கை கூறுகிறது, “கௌசாலாக்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் மூலதன முதலீடுகள் மற்றும் வேலைச் செலவுகளைச் செய்வதற்கு தாராளமாக நிதியளிக்கப்பட வேண்டும். அனைத்து மானியங்களும் மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்க வேண்டும் (மோசமான நிலையில் உள்ள, மீட்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட கால்நடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்)" என கூறுகிறது.
"கௌசாலாக்கள் அதன் கட்டிடங்கள் மற்றும் நிலத்தில் உள்ள சோலார் மரங்கள் ஆகியவற்றில் சூரிய மின்சக்தி ஆலைகளில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதல் வருமான ஆதாரங்களை உருவாக்க உதவ வேண்டும்" என்று அறிக்கை கூறுகிறது.
"இந்திய அரசு உரக் கட்டுப்பாட்டு ஆணையில் பசுவின் சாணம் அடிப்படையிலான கரிம உரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தரநிலைகள், மாட்டுச் சாணம் மற்றும் மாட்டு கோமியம் சார்ந்த தயாரிப்புகளை பரவலாகச் சேர்ப்பதற்கு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். கரிம உரத்திற்கான தற்போதைய சோதனை வசதிகள், அதன் பரிந்துரைகள் உட்பட, மாட்டு சாணத்தை அடிப்படையாகக் கொண்ட தற்போதுள்ள மற்றும் புதிய அனைத்து தயாரிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும், ”என்று அறிக்கை கூறுகிறது.
அனைத்து கௌசாலாக்களையும் ஆன்லைனில் பதிவு செய்ய நிதி ஆயோக்கின் தர்பன் போன்ற புதிய போர்ட்டலையும் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது. "இந்த பதிவு செய்யப்பட்ட கௌசாலாக்கள் விலங்குகள் நல வாரியத்தின் ஆதரவைப் பெற தகுதியுடையவர்கள்" என்று அறிக்கை கூறுகிறது.
பணிக்குழுவின் கூற்றுப்படி, இந்திய விலங்கு நல வாரியம், கால்நடை சுகாதாரத் துறையில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த கௌசாலாவில் பிரதான் மந்திரி பசு ஔஷதி கேந்திராவைத் திறக்கலாம். மேலும், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் பால் பொருட்களின் சந்தைப்படுத்தல் மற்றும் தீவனம், உணவு மற்றும் இன-கால்நடை நடைமுறைகளை வழங்குவதில் கௌசாலாக்களை ஆதரிக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது.
ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி, அறிக்கை கூறுகிறது, “1,000 பசுக்கள் கொண்ட கௌசாலாவை நடத்துவதற்கு நிலம் உட்பட ஒரு நாளைக்கு 1,18,182 ரூபாய் செலவாகும், நிலம் இல்லாமல் அது சுமார் 82,475 ரூபாய் ஆகும். கௌசாலாக்களிடமிருந்து கிடைக்கும் பொருட்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானம் 30 சதவிகிதம் மட்டுமே என்று கணக்கெடுப்பு காட்டுகிறது, மீதமுள்ளவை நன்கொடைகள், மானியங்கள் மற்றும் இதர ஆதாரங்களின் ஒருங்கிணைந்த சலுகைகளால் பங்களிக்கப்படுகின்றன. ஒரு கௌசாலாவில் 1,000 மாடுகளுக்கு ஒரு நாளைக்கு மொத்த வருமானம் ரூ.50,074 மட்டுமே. இது பெரிய வருவாய் இடைவெளிகளை ஏற்படுத்துகிறது மற்றும் கௌசாலாக்களை பொருளாதார ரீதியாக சாதகமற்றதாக ஆக்குகிறது.
மேலும் “கௌஷாலாக்களுக்கு அவர்களால் உற்பத்தி செய்யப்படும் உரம் மற்றும் பிற கரிம உரங்களை சந்தைப்படுத்தும் திறன் இல்லை, மேலும் அவர்களின் தயாரிப்புகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை மற்றும் வாங்குபவர் இல்லை. பொதுத்துறை உர விநியோக நிறுவனங்களான IFFCO, KRIBHCO மற்றும் மாநில அளவிலான ஏஜென்சிகள் கௌஷாலாக்கள் உற்பத்தி செய்யும் தரப்படுத்தப்பட்ட கரிம மற்றும் உயிர் உரங்களை சந்தைப்படுத்த கட்டாயப்படுத்த வேண்டும். MNREGA திட்டத்தின் மூலம் தீவன வங்கியை உருவாக்க கௌசாலாக்களுக்கு ஆதரவை வழங்குவதில் கிராம பஞ்சாயத்து ஈடுபட வேண்டும் என்றும் பணிக்குழு பரிந்துரைக்கிறது,” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.