மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான தனி கொள்கை தற்போது தேவைப்படவில்லை என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்புகூட, 'விரைவில் மின் வாகனங்களுக்கான தனிக் கொள்கை அறிவிப்பு வெளியாகும்' என கூறி வந்த கட்கரி, இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.
நேற்று வரை, அமைச்சர் கட்கரி அவசரம் காட்டி வந்தாலும், வாகன உற்பத்தியாளர்கள் யாரும் அதற்கு இந்தியா தயாராகவில்லை என்றே கருதினர். அதோடு, வாகன உற்பத்தி நிறுவனங்களும் இதற்கு தயாராகவில்லை. இந்நிலையில், உடனடியாக தங்களை மாற்றியமைத்துக் கொள்வதில் உள்ள சவால்களை ஒருபுறம் ஆய்வு செய்துக் கொண்டே, வாகன உற்பத்தியாளர்கள் கூடுதல் கால அவகாசம் தேவை என்பதையும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இன்று தனது புதிய கருத்தைத் தெரிவித்துள்ளார். இது பல வாகன உற்பத்தி நிறுவனங்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. 2030க்குள் இந்தியா மின்சார கார்களுக்கு மாற வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்த நிலை நிஜமானால், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் நாடு 6000 கோடி அமெரிக்க டாலர்களைச் சேமிக்க இயலும். இந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தால், 3,60,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என்பது கவனிக்கத்தக்கது.