முந்தைய காலங்களில், நரேந்திர மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்ள மறுத்த நிதிஷ் குமார், நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் பெயரை மையப்படுத்தி வாக்கு சேகரித்தார். தனது வளர்ச்சித் திட்டங்கள் பெறும் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்த நிதிஷ், நேற்று தனது உரையை பீகாரில் மத்திய அரசு மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் உறுதி செய்யப்படும் என்று மோடி தனது உரையில் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நிதீஷ், "அவரின் தேர்தல் கோரிக்கை நியாயமானது. அதை உற்றுக் கேளுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், நாட்டின் முதன்மை மாநிலமாக பீகாரை மாற்றுவார். பீகார் முன்னேறும்,”என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு திட்டங்களான பாட்னா மெட்ரோ, ஸ்மார்ட் சிட்டி திட்டம், உஜ்வாலா திட்டம், சாலை மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றை நிதிஷ் குமார் குறிப்பிட்டார்.
'மோடி, மோடி' என்ற பெரும் முழக்கங்களுக்கு மத்தியில் பேசிய நிதிஷ், மக்கள் மோடியின் குரலுக்கு செவிசாய்க்க வந்ததாக தெரிவித்தார்.மேலும், தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் நிகரில்லாதவை என்றார்.
2019 மக்களவைத் தேர்தலில் 40 இடங்களில் 39 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதற்கு, மோடியின் தாக்கங்கள் முக்கியமானதாக கருதப்பட்டாலும், பீகார் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்வர் ஒருவர் பிரதமரின் பெயரால் வாக்கு கோருவது இதுவே முதல் முறையாகும்.
நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்த காலங்களில், 2009 மக்களவைத் தேர்தல் மற்றும் 2010 பீகார் சட்டமன்றத் தேர்தல்களில், நிதிஷ் குமாரின் வேண்டுகோளுக்கு இணங்க என்.டி.ஏ தேர்தல் பிரசாரங்களில் மோடி விலக்கி வைக்கப்பட்டார். 2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,“பீகாரில் சுஷில் மோடி இருக்கும்போது, இங்கு மற்றொரு மோடி (நரேந்திரர்) தேவையில்லை” என்று தெரிவித்தார். மேலும், அதே ஆண்டு பாட்னாவில் மோடி பங்கு கொள்வதாக இருந்த விருந்தையும் அவர் ரத்து செய்திருந்தார்.
மோடியுடனான இந்த அசவுகரிய போக்குக்கு, 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மதக் கலவரம் தான் முக்கிய காரணமாக இருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சியில் நிதிஷ் குமார் பங்கு வகித்தார்.
2013- ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்த நிதிஷ் குமார், 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் மெகா கூட்டணியில் (மகாகத்பந்தன்) பங்கு வகித்தார். அப்போது, நடைபெற்ற தேர்தல் பொதுக் கூடங்களில்"சங் முக்த் பாரத்" என்ற கோஷத்தையும் விடுத்தார்.