பாட்னாவில் ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றது. பதவியேற்பு விழா மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார். அவருடன் இதற்கு முன்பு துணை முதல்வர் பதவி வகித்த சுஷில் மோடிக்கு பதிலாக பாஜக தலைவர்கள் தர்கிஷோர், ரேணு தேவி இருவரும் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
நிதிஷ் குமார் குமார் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழுவுக்கு பீகார் ராஜ் பவனில் ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாமல் ஆர்.ஜே.சி புறக்கணிப்பு செய்தது.
பதவியேற்றவர்களில், 5 அமைச்சர்கள் ஜே.டி.யுவைச் சேர்ந்தவர்கள். தலா ஒருவர் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்.ஏ.எம்) மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி (வி.ஐ.பி) கட்சியைச் சேர்ந்தவர்கள். ஜே.டி.யு அமைச்சர்களில் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த பிஜேந்திர பிரசாத் யாதவ், அசோக் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சவுத்ரி ஆகியோரும் புதிய முகங்களான மேவா லால் சவுத்ரி மற்றும் ஷீலா குமாரி மண்டல் ஆகியோரும் அடங்குவர்.
பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்றதோடு, முந்தைய அரசாங்கத்தில் சுகாதாரத் துறை அமைச்சரகாக பதவி வகித்த மங்கல் பாண்டே மற்றும் அமரேந்திர பிரதாப் சிங், ராம்ப்ரித் பாஸ்வான், ஜிபேஷ் குமார் மற்றும் ராம் சூரத் ராய் ஆகியோரும் பதவியேற்றனர். ஜிதன் ராம் மாஞ்சியின் மகன் எச்.ஏ.எம் எம்.எல்.சி சந்தோஷ்குமார் சுமனும் வி.ஐ.பி.யின் நிறுவனர் முகேஷ் சாஹ்னி ஆகியோரும் பதவியேற்றார்கள்.
தர்கிஷோர் பிரசாத், சுஷில் மோடியின் பனியா சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ஆண்களை விட பெண்கள் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்ததாக நம்பப்படுவதால், பாஜக நோனியாவைச் சேர்ந்த ரேணு தேவியைத் துணை முதல்வராக தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு செய்தியை உணர்த்தியுள்ளது. ரேணு தேவி இதற்கு முன்பு பாஜக தேசிய துணைத் தலைவராக பணியாற்றினார்.
பீகார் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட நிதிஷ் குமார், “பொதுமக்களின் முடிவின் அடிப்படையில், என்.டி.ஏ மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது. நாங்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவை செய்வோம்.” என்று நிதிஷ் குமார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார், “சுஷில் மோடியை துணை முதல்வராக நிறுத்தக்கூடாது என்பது பாஜகவின் முடிவு. இது குறித்து அவர்களிடம் கேட்கப்பட வேண்டும். ” என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"