/indian-express-tamil/media/media_files/2025/07/22/jagdeep-dhankhar-2025-07-22-14-17-24.jpg)
NJAC முதல் அடிப்படை கட்டமைப்பு வரை: நீதித்துறையுடன் ஜகதீப் தன்கரின் தொடர் மோதல்!
திங்கள்கிழமை இரவு துணைக் குடியரசுத் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்த ஜகதீப் தன்கரின் பதவிக்காலம், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், நீதித்துறைக்கு எதிராகவும் பலமுறை பேசியதால் சர்ச்சைக்குரியதாகவே அமைந்தது. மேற்குவங்க ஆளுநராக இருந்த போதும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) அரசுடன் அவருக்குப் பல மோதல்கள் இருந்தன.
நீதித்துறை நியமனங்களில் மோதல்: NJAC தீர்ப்பை கேள்வி கேட்ட தன்கர்
2022 குளிர்கால கூட்டத்தொடரின்போது ராஜ்யசபா சபாநாயகராக தன்கரின் பணிகள் சர்ச்சையுடன் தொடங்கின. தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC) சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் 2015 ஆம் ஆண்டு தீர்ப்பை அவர் கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற இறையாண்மைக்கு ஏற்பட்ட "கடுமையான சமரசம்" என்றும், "மக்களின் ஆணையை அவமதிக்கும்" "வெளிப்படையான உதாரணம்" என்றும் அத்தீர்ப்பை வர்ணித்தார். டிசம்பர் 7 அன்று சபையில் அவர் பேசிய இந்த வார்த்தைகள், "மக்களின் கட்டளைக்கு" பொறுப்பான நாடாளுமன்றம் "இந்த பிரச்னையைத் தீர்க்க கடமைப்பட்டுள்ளது" என்பதையும், "அது அவ்வாறே செய்யும்" என்பதையும் வலியுறுத்தின.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களும் வெளிப்படையான சவால்களை நிறுத்த வேண்டும் என்று தன்கர் வலியுறுத்தினார்.அரசியலமைப்பு அமைப்புகளின் செயல்பாட்டில் அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த திட்டமிட்டிருந்த நேரத்தில் இந்தக் கருத்து வெளிவந்தன. முன்னதாக, அப்போதைய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறை "தெளிவற்றது", "பொறுப்பற்றது" மற்றும் அரசியலமைப்பிற்கு "அந்நியமானது" என்று கூறி உச்ச நீதிமன்றத்தின் அதிருப்தியைப் பெற்றிருந்தார்.
அடிப்படை கட்டமைப்பு கோட்பாடும் கேள்விக் குறியும்!
ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜனவரி 11, 2023 அன்று, கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 1973-ம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக் குறிப்பிட்டு, அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு குறித்த விவாதத்தை தன்கர் மீண்டும் தூண்டினார். அத்தீர்ப்பில், நாடாளுமன்றம் அரசியலமைப்பைத் திருத்த அதிகாரம் பெற்றிருந்தாலும், அதன் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. ஜெய்ப்பூரில் நடந்த மாநாட்டில் பேசிய தன்கர், "நாம் ஜனநாயக நாடா?" என்ற கேள்விக்கு இத்தகைய சூழலில் பதிலளிப்பது கடினம் என்று குறிப்பிட்டார்.
"ஜனநாயக சமூகத்தில், அடிப்படை கட்டமைப்பிற்கு அடிப்படையானது மக்களின் மேலாதிக்கம், மக்களின் இறையாண்மை, நாடாளுமன்ற இறையாண்மை" என்று தன்கர் வலியுறுத்தினார். "சட்டமன்றங்களே முதலமைச்சர், பிரதமர் போன்றவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இறுதி அதிகாரம் சட்டமன்றத்திடமே உள்ளது. மற்ற நிறுவனங்களில் யார் இருப்பார்கள் என்பதை சட்டமன்றமே தீர்மானிக்கிறது. இத்தகைய நிலையில், அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களும் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை தங்கள் வரம்புகளுக்குள் இருக்க வேண்டும்" என்றார். மேலும், "1973-ல், உச்சநீதிமன்றம் வழங்கிய அடிப்படைக் கட்டமைப்பு என்ற கருத்தை, நீதித்துறைக்கு உரிய மரியாதையுடன், என்னால் ஏற்க முடியாது," என்று அவர் வெளிப்படையாகக் கூறினார்.
"1973 இல், கேசவானந்த பாரதி வழக்கில், அரசியலமைப்பை நாடாளுமன்றம் திருத்தலாம், ஆனால் அதன் அடிப்படைக் கட்டமைப்பைத் திருத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் அடிப்படைக் கட்டமைப்பு என்ற கருத்தை அளித்தது. நீதித்துறைக்கு உரிய மரியாதையுடன், இதை என்னால் ஏற்க முடியாது," என்று தன்கர் கூறினார்.
இந்த மார்ச் மாதம், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் புதுடெல்லி வீட்டில் ரொக்கப் பணம் கட்டுகட்டாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தன்கர் மீண்டும் NJAC விவாதத்தை எழுப்பினார். நீதித்துறை நியமனங்களுக்கான இந்த முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யாமல் இருந்திருந்தால் "விஷயங்கள் வேறுபட்டிருக்கும்" என்று அவர் கூறினார். மார்ச் 25 அன்று அவர் ஆற்றிய கருத்துக்கள், நீதிபதி வர்மாவின் நடத்தை குறித்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு தனது விசாரணையைத் தொடங்கி, அவரது இல்லத்திற்குச் சென்ற அதே நாளில் வந்தன.
NJAC சட்டம், நீதிபதிகளின் நியமனம், இந்தியத் தலைமை நீதிபதி தலைமையில் 6 பேர் கொண்ட அமைப்பால் மேற்கொள்ளப்படும் என்று முன்மொழிந்தது. இந்த அமைப்பில் உச்ச நீதிமன்றத்தின் 2 மூத்த நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர் மற்றும் 2 "சிறந்த" நபர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த 2 சிறந்த நபர்களும் பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் லோக்சபாவில் உள்ள மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இருப்பினும், உயர் நீதித்துறையில் நீதிபதிகளின் தேர்வு மற்றும் நியமனம் தொடர்பான விஷயத்தில் நீதித்துறையின் மேலாதிக்கத்தை உறுதி செய்யாத ஒரு மாற்று நடைமுறையை ஏற்றுக்கொள்வதில் கேள்வி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருதியது.
நீதித்துறை, குடியரசுத் தலைவர் மீதான கருத்துகள்:
ஏப்ரல் 22 அன்று, உச்ச நீதிமன்றம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கும் ஆளுநர்களுக்கும் 3 மாத கால வரம்பை விதித்த உடனேயே தன்கர் நீதித்துறையைக் கேள்வி கேட்கத் தயங்கவில்லை. அரசியலமைப்பின் 75 ஆண்டு நினைவுகூரும் டெல்லி பல்கலைக்கழக நிகழ்வில் அவர் பேசுகையில், "அரசியலமைப்பில் நாடாளுமன்றத்திற்கு மேலான எந்த அதிகாரமும் இல்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியலமைப்பின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் என்பதில் அவர்களே இறுதி எஜமானர்கள்" என்று கூறினார்.
இந்தியாவில் நீதித்துறை குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடும் நிலை இருக்க முடியாது என்றும் தன்கர் கூறினார். "எனவே, சட்டமியற்றும், நிர்வாக செயல்பாடுகளைச் செய்யும், ஒரு சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நமக்கு இருக்கிறார்கள், மேலும் அவர்களுக்கு எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லை, ஏனெனில் நாட்டின் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது" என்று அவர் அதே நாளில் ராஜ்யசபா பயிற்சி பெறுபவர்களின் 6-வது தொகுதிக்கு துணைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.