உத்தரபிரதேச மாநிலத்தில் ஆதார் அட்டை இல்லாததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத கர்ப்பிணி பெண் ஒருவர், மருத்துவமனை வாயிலில் குழந்தை பெற்றெடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்திலுள்ள ஷான்கஞ்ச் எனுமிடத்தில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக சமுதாய மருத்துவ மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அப்பெண்ணிடம் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு இல்லாததால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என மருத்துவ நிர்வாகம் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், அப்பெண் மருத்துவமனை வாயிலில் குழந்தையை பெற்றெடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து, அப்பெண்ணின் கணவர் தெரிவித்ததாவது, “நாங்கள் மருத்துவமனைக்கு சென்றபோது, அவர்கள் எங்களிடம் சில ஆவணங்களை கேட்டனர். அவை எங்களிடம் இல்லை என்றவுடன் எங்களை மருத்துவமனையில் அனுமதிக்காமல் அனுப்பிவிட்டனர். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தவுடனேயே வாயிலில் என் மனைவி குழந்தையை பெற்றெடுத்தார்”, என தெரிவித்தார்.
அப்பெண்ணை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்ப மருத்துவர் பரிந்துரைத்ததாகவும், ஆனால், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்ததாகவும் மருத்துவ கண்காணிப்பாளர் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.