மேற்குவங்க மாநிலத்தை தொடர்ந்து, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர்கள் தெரிவி்த்துள்ளனர்.
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...
2014 டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த இந்துக்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதா, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த சட்டத்தை கேரள மாநிலத்தில் அமல்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்திய அரசியலமைப்புக்கு பங்கம் வராமல், சட்ட திருத்தங்களை கொண்டு வரலாம் என உச்சநீதிமன்றம் பல தருணங்களில் எடுத்துக்கூறியுள்ளது. ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. மத்திய அரசு, தனது ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்புக்கு எதிரான இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் இந்த மசோதாவுக்கு கேரளாவுக்கு ஒருபோதும் இடமில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா, சர்வதேச நாடுகளின் முன்னிலையில், இந்தியாவை இழிவுபடுத்தப்பட்ட நாடு ஆக்கும் வகையில் உள்ளது. அமைதியாக வாழும் நாட்டு மக்களை மதங்களின் அடிப்படையில் பிரித்து அவர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தி வன்முறைகள் அதிகம் நிகழும் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இடம்பெற செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மக்களை மதங்களின் அடிப்படையில் பிரித்தாள்வதன் மூலம், நாட்டின் ஜனநாயகம் மற்றும் சமநீதி குழிதோண்டி புதைக்கப்படுகிறது.
வீர் சாவர்க்கர் மற்றும் எம்எஸ் கோவால்கரின் கனவுகளை நடைமுறைப்படுத்தும் நிகழ்வுகளிலேயே மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்திய மக்களின் சமநிலை மற்றும் சமத்துவத்துக்கு எதிராக உள்ள எந்தவொரு சட்டத்திற்கும் இடதுசாரிகள் ஆளும் கேரள மாநிலத்தில் இடமில்லை. இந்திய அரசியலமைப்பின் அடிப்படையாதெனில், அது மதசார்பற்ற கொள்கை தான். இந்த மசோதாவின் மூலம், நாட்டு மக்கள் மதரீதியாக பிரிக்கப்படுகிறார்கள்.
நாட்டின் பொருளாதார மந்தநிலை விவகாரத்தை திசைதிருப்பவே, மத்திய அரசு, இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் அதை வழிமொழிந்துள்ளார். ஹிட்லர் ஜெர்மனியில் நிகழ்த்தியது போல, பிரிட்டிஷார் சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் நடந்துகொண்டது போல, மத்திய அரசு தற்போது நடந்து கொண்டு வருகிறது. இதுபோன்ற வரலாறுகளுக்கு நீண்ட ஆயுட்காலம் கிடையாது. இந்த மசோதாவுக்கு எதிராக, தற்போதைய நாட்டின் பலபகுதிகளில் போராட்டங்கள் நடைபெற துவங்கிவிட்டன என்று விஜயன் கூறியுள்ளார்.
Any legislation that seeks to divide people on religious lines is illegal, unethical & unconstitutional. India's strength lies in its diversity and #CABBill2019 violates the basic principle of the constitution. Hence my govt will not allow the bill to be implemented in Punjab.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) December 12, 2019
மதசார்பற்ற நாடான இந்தியா மீது நடத்தப்பட்ட நேரடியான தாக்குதலாக இந்த மசோதா உள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டசபையில் எங்கள் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை உள்ளது. எனவே, இந்த மசோதாவை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த விடமாட்டோம். மதசார்பற்ற கொள்கையிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை கொண்ட நாட்டில் இதுபோன்ற சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணி யாதெனில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பதேயன்றி, அதை அழிப்பது அல்ல. இறையாண்மை, சமத்துவம், மதசார்பின்மை, ஜனநாயக குடியரசு உள்ளிட்டவைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய மக்கள் அனைவருக்கும் சமநீதி, சமநிலை, சுதந்திரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டத்தின் மூலம் அவர்களை பிரிக்க நினைப்பது கண்டிக்கத்தக்க ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டீஸ்கர், ராஜஸ்தானும் எதிர்ப்பு : குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு சட்டீஸ்கர் அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அரசியலமைப்புக்கு எதிரான இந்த மசோதா விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி எடுக்கும் நிலைப்பாட்டை, சட்டீஸ்கர் மாநிலத்தில் அமல்படுத்துவோம் என்று சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.
அசோக் கெலாட் எதிர்ப்பு : பாரதிய ஜனதா கட்சி, இந்த மசோதாவின் மூலம், இந்தியாவை இந்து நாடு ஆக்க முயற்சிக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். மத்திய அரசு விளைவுகளை அறியாமல், ஆபத்தான விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறது.
மம்தா காட்டம் : டிசம்பர் 6ம் தேதி, கோல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை காட்டிலும், மக்களை பிளவுபடுத்தும் அம்சங்களே அதிகம் இடம்பெற்றிருந்தன. மத அடிப்படையிலான குடியுரிமை திட்டத்துக்கு தனது மாநிலம் ஒருபோதும் அனுமதி அளிக்காது. மக்களை மத அடிப்படையில் பிரிக்காமல் அனைவரையும் சரிசமமாக நடத்துங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம். இது சத்தியம்.
நாடாளுமன்ற அவைகளில் உங்களுக்கு போதிய பலம் இருப்பதினால், அங்கே இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்தி மக்களை மதரீதியாக பிளவுபடுத்த விடமாட்டோம். இதற்காக நான் என் உயிரையும் துறக்க தயாராக உள்ளேன். நிச்சயம் பண்ணுவேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.