'புதிய இந்தியாவுக்காக புதிய ரயில்கள்' - பட்ஜெட் குறித்து மத்திய ரயில்வே மந்திரி!

2018-19 ரயில்வே பட்ஜெட்டில் சரியாக ரூ.1,48,528 கோடி ஒதுக்கீடு. இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே ஒதுக்கப்பட்ட அதிக தொகை இதுவே.

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார். ரயில்வே பட்ஜெட்டில், புதிய ரயில்வே திட்டங்களுக்காக ஒரு லட்சத்து நாற்பத்தி எட்டாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இருப்பினும், டிக்கெட் விலை குறைப்பு குறித்தும், நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளின் ‘அடிக்கடி மாறும் டிக்கெட் விலை’ குறித்த குற்றச்சாட்டிற்கும் பட்ஜெட்டில் எந்த பதிலும் இல்லை.

2018-19 ரயில்வே பட்ஜெட்டில் சரியாக ரூ.1,48,528 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே ஒதுக்கப்பட்ட அதிக தொகை இதுவேயாகும். கடந்த வருடம் 1.31 லட்சம் கோடி நிதி ரயில்வே துறைக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. 92 ஆண்டுகாலம் பாரம்பரியமான தனி ரயில்வே பட்ஜெட் முறை நிறுத்தப்பட்டு, கடந்த ஆண்டு முதல் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.

இருப்பினும், புதிய ரயில்கள் குறித்த எந்தவொரு பெரிதான அறிக்கையும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நவீனமயமாக்குதல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ரயில்வே பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.

மேலும், அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை, சிசிடிவி வசதி, 600 முக்கிய ரயில் நிலையங்கள் புனரமைத்தல், 25,000 பயணிகளுக்கு மேல் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் எஸ்கலேடர்ஸ் (escalators) வசதி, 4,267 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தகுந்த அம்சங்களாகும்.

பட்ஜெட் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில், “விவசாயிகளுக்கும், ஏழ்மை மக்களின் சுகாதாரத்திற்கும் இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மேலும் வலுவடையும். இந்த பட்ஜெட் மக்களின் வாழ்வியலை எளிமைப்படுத்துவதுடன், புதிய இந்தியாவிற்காக புதிய ரயில்களையும் தந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close