2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் களம் எப்படி இருக்கும்? காங்கிரஸ் கட்சியினரும், பாஜகவினரும் எப்படி மக்களை சந்தித்து மக்களிடம் தங்களின் கொள்கைகளை விளக்குவார்கள், அல்லது எதிர் கட்சி தலைவர்களை எப்படி சாடி ஓட்டு வங்கி வாங்குவார்கள் என்பதை நேற்றே ஒரு வழியாக யூகிக்க இயன்றது.
நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்தக் கோரி தெலுங்கு தேசம் சார்பில் ஒரு கோரிக்கை மக்களவை தலைவரிடம் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விவாதத்திற்கு நேற்று நாடாளுமன்றத்தில் நேரம் ஒதுக்கி அறிவித்தார் சுமித்ரா மகஜன்.
12 மணி நேர விவாதத்திற்கு பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி மீதான ஆட்சிக்கு தான் 325 - 126 என்ற நிலையில் ஆதரவு கிடைத்தது. இருப்பினும் ராகுல் பேசிய உரையும், அதற்கு பதில் கூறிய மோடியின் உரையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதில் நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கினார். பொதுவாக ஒவ்வொரு உரையிலும் ”மதசார்பற்ற” என்ற வார்த்தையினை பயன்படுத்தும் ராகுல் அதனை முற்றிலும் ஒதுக்கிவிட்டு “அம்பேத்கர் கனவு கண்ட நாடு” என்ற பதத்தினை அதிகம் உபயோகப்படுத்தினார்.
கடந்த நான்கு வருடங்களில் சிறுபான்மையினர் மீதும், தலித்துகள் மீதும் பசுக்களை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பற்றி பேசினார்.
ராகுலின் பேச்சினை எப்போதும் குறைத்து மதிப்பிட்ட பாஜகவினர், ராகுல் மோடியினை கேள்வி கேட்கும் அளவிற்கான எதிர்கட்சி தலைவராக, காங்கிரஸ்ஸின் பிரதம வேட்பாளராக தன்னை வடிவமைத்துக் கொள்வார் என்றும் நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள் என்பது உண்மை.
ஆனால், அவரின் பேச்சுக்கு பதில் கூறிய மோடியோ “தங்கள் கட்சியில் தங்களுக்கு இருக்கும் பலத்தினைத் தான் முதலில் ராகுல் நிரூபிக்க வேண்டுமே தவிர, எங்கள் ஆட்சியின் பெரும்பான்மை பற்றி பெரிதும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.
நரேந்திர மோடி தற்போது இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் நேருவும் காந்தியும் நாட்டிற்காக என்ன செய்தார்கள் என்று பலமுறை குறிப்பிட்டு பேசினார். பின்பு சரண் சிங், சந்திரசேகர், தேவ கவுடா ஆகியோர்களின் ஆட்சி காலம் பற்றியும் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக உரை நிகழ்த்திய காட்சி
மேலும் அவர் பேச்சின் மூலம் மாநிலங்களில் ஆட்சி செய்யும் தலைவர்கள் பற்றியும் அவர்களின் நிறைகுறைகளையும் கணக்கில் வைத்தார்.
ராகுல் பேசும் போது, மதசார்பற்ற என்பதை தவிர்த்து, இந்துவாக அவரை முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சியினை இஸ்லாமியர்கள் கட்சி என்று சமீபத்தில் கூறியதை நினைவு கூறும் வகையில் பேசினார்.
நரேந்திர மோடி தன் ஆட்சி காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை விளக்கி பேசினார். ஆனால் ராகுலோ ராபேல் டீல், சூட்-பூட் காரர்களுக்கு உதவும் அரசு, வெளிநாடுகளுக்கு மட்டுமே செல்லும் பிரதமர், ஜும்லா ஸ்ட்ரைக், பெண்களின் பாதுகாப்பு, தலித் மற்றும் பழங்குடிகளின் நல்வாழ்வு பற்றி எல்லாம் பேசினார்.
ராகுல் பாஜக ஆட்சிக்கு எதிராக உரை நிகழ்த்திய போது
இது முழுக்க முழுக்க ராகுலால் நிகழ்த்தப்பட்ட ராகுலின் உரை. இந்த உரையின் போது ஒரு முறையும் கூட தங்கள் கட்சியின் கடந்த கால சாதனைகள் பற்றி குறிப்பிடவில்லை.
மோடியையும் அமித் ஷாவையும் சாடிய அவர், இவர்கள் ஆட்சியில் இருக்கும் போதே தங்களால் ஆனதை செய்து கொள்வது நலம் என்றும், பாஜக எவ்வாறு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வேறுபடுகிறது என்பதைப் பற்றியும் மிகவும் தீவிரமாக பேசினார் ராகுல்.