"ராகுல் காந்தி எனக்கும் தலைவர்தான். அதில், எவ்வித சந்தேகமும் இல்லை”, என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார். அப்போது, “இப்போது நமக்கு புதிய காங்கிரஸ் தலைவர் உள்ளார். என்னுடைய சார்பாகவும், உங்களது சார்பாகவும் அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கும் தலைவர்தான். அதில், எவ்வித சந்தேகமும் இல்லை”, என சோனியா காந்தி கூறினார்.
மேலும், மத்திய அரசு அதிகளவில் விளம்பரம் தேடிக்கொள்வதாகவும், குறைந்தளவிலேயே செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றம், நீதித்துறை, ஊடகம், குடிமைச் சமூகம் என ஜனநாயகத்தின் பல்வேறு அமைப்புகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருவதாகவும், விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி அரசியல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் சோனியா காந்தி சாடினார்.
"குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, தலித்துகள் மீது வன்முறை ஏவப்படுகிறது”, என கூறினார்.
வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமல் இருப்பதுடன் ஏற்கனவே உள்ள வேலைகளும் இழக்கப்பட்டுள்ளதாக சோனியா காந்தி தெரிவித்தார்.