அலோக் வர்மாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.. நீதிபதி பட்நாயக் அதிரடி!

எனக்கு இயற்கையான நீதி கிடைக்கவில்லை

சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து தீயணைப்பு துறை தலைவராக மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா அந்த பொறுப்பை ஏற்க மறுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வழக்கு ஒன்றில் இருந்து தொழிலதிபர் ஒருவரை விடுவிக்க லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின்பேரில், சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், நம்பர் 2 இடத்தில் இருந்த இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனாவுக்கும் இடையே கடும் பனிப்போர் ஏற்பட்டது.

விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலையிட்டு இருவரையும் நேரில் அழைத்துப் பேசினார். இதன்பின்னர் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்ததன் பேரில் இருவரும் கட்டாய விடுப்பில் கடந்த அக்டோபர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன்பின்னர் நாகேஸ்வர ராவை தற்காலிக இயக்குனராக மத்திய அரசு நியமனம் செய்தது. அப்போது, அலோக் வர்மாவின் டீமில் இருந்து முக்கியமான 10 பேரை பணியிட மாற்றம் செய்து நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டார்.

இதற்கிடையே கட்டாய விடுப்பில் செல்ல வைக்கப்பட்டது மற்றும் இடைக்கால சிபிஐ இயக்குனரை நியமித்தது ஆகியவற்றை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கின் தீர்ப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகியது. அப்போது, அலோக் வர்மா மீண்டும் தனது பணியில் தொடரலாம் என்றும் கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்க முடியாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.

இதையடுத்து மீண்டும் அவர் சிபிஐ இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்பின்னர் நேற்று முன் தினம் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூடி, அலோக் வர்மாவை பணியிட மாற்றம் செய்து அவரை தீயணைப்பு துறை தலைவராக நியமனம் செய்தது. அவருக்கு பதிலாக மீண்டும் நாகேஸ்வர ராவை சிபிஐ இயக்குனராக நியமித்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத அலோக் வர்மா, , புதிய பொறுப்பான தீயணைப்பு துறை தலைவர் பணியை ஏற்க மறுத்து  தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதுகுறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலருக்கு, அலோக் குமார் எழுதிய கடிதத்தில், “என்னை பணி மாற்றம் செய்யும் முடிவை எடுப்பதற்கு முன், எனக்கெதிராக, சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து, விளக்கம் அளிக்க, எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.எனக்கு இயற்கையான நீதி கிடைக்கவில்லை. என்னை, சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து நீக்குவதை உறுதிப்படுத்தும் வகையில், ஒட்டுமொத்த விசாரணையும் அமைந்து இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அலோக் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “ஊழலுக்கு எதிராக வர்மாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. முழு விசாரணையும் (சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ்) அஸ்தானாவின் புகாரில் நடைபெற்றது. சிவிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து கருத்துக்களும் முழுமையாக என்னுடையது இல்லை. சிவிசியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதில் என்னுடைய பங்கு இல்லை” என்று கூறியுள்ளார்.

அலோக் வர்மா பதவி பறிப்பு குறித்த காரணம் தெரிவித்து சிவிசி வெளியிட்டிருந்த அறிக்கையில், அலோக் வர்மாவுக்கு எதிரான 10 புகார்களே அவர் மீண்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணமாக கூறப்பட்டது. அவற்றில் 3 புகார்களுக்கு ஆதாரம் உள்ளது. 6 புகார்களுக்கு ஆதாரம் இல்லை. ஒரு புகாருக்கான ஆதாரத்தின் நம்பகத்தன்மை பல்வேறு மாறுபாடுகளை கொண்டதாக உள்ளது. என தெரிவிக்கப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close