/indian-express-tamil/media/media_files/2025/02/19/dcQsl59FN0ydAwdD7CjO.jpg)
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) 2021 ஆம் ஆண்டில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் விசாரணையை, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் "ஆதாரம் இல்லாததால்" முடித்து வைக்க உள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Lokayukta police to file closure report in MUDA case against CM Siddaramaiah, cites ‘lack of evidence’
ஆர்.டி.ஐ ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா புகாரின் பேரில், செப்டம்பர் 28, 2024 அன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஊழல் நடந்ததற்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி லோக் ஆயுக்தா போலீசார் விசாரணையை முடித்து வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சுவாமி, நில உரிமையாளர் தேவராஜு ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது.
லோக் ஆயுக்தா காவல்துறை தனது நோட்டீஸில், "குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது நிரூபிக்கப்படும் வகையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் 2016 முதல் 2024 வரை 50:50 திட்டத்தின் கீழ் இழப்பீட்டு மனைகள் வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்குப் பிறகு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 173 (8) இன் கீழ் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 17 அன்று, லோக் ஆயுக்தா போலீசார் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினர். லோக் ஆயுக்தா போலீசாரின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணையை பிப்ரவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை புகார்தாரர் எதிர்க்கலாம். மேலும், அதனை ஏற்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
லோக் ஆயுக்தா போலீஸ் ஐ.ஜி மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோரின் மேற்பார்வைக்கு உத்தரவிடப்பட்டதையடுத்து, உயர் போலீஸ் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட விசாரணை அறிக்கையை லோக் ஆயுக்தா போலீசார் கடந்த மாதம் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
பிப்ரவரி 7 ஆம் தேதி, சி.பி.ஐ விசாரணை மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. குறிப்பாக, லோக் ஆயுக்தா காவல்துறை மாநில அரசின் கீழ் செயல்படுவதால் இந்த வழக்கை திறம்பட விசாரிக்கவில்லை என்று கூறி சினேகமாயி கிருஷ்ணா அதனை தாக்கல் செய்திருந்தார்.
ஜூலை 2024 இல் கர்நாடக முதல்வர் மீது வழக்குத் தொடர கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம், சினேகமாயி கிருஷ்ணா அனுமதி பெற்றார். இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 24, 2024 அன்று உயர்நீதிமன்றத்தால் வழக்கு தொடரப்பட்டது.
லோக் ஆயுக்தா, சி.பி.ஐ அல்லது வேறு ஏஜென்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்.டி.ஐ ஆர்வலர் கோரியதை அடுத்து, செப்டம்பர் 25, 2024 அன்று லோக் ஆயுக்தா காவல்துறையால் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சித்தராமையாவின் மனைவிக்கு 2010-ல் அவரது சகோதரர் பரிசாக வழங்கிய சுமார் 3.16 ஏக்கர் நிலத்தை 2014-ல் தவறாக கையகப்படுத்திய பின்னர், 2021 ஆம் ஆண்டில் முடா மூலம் இழப்பீடாக 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 இடங்கள் ஒதுக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
தன் மீது எந்த தவறும் இல்லை, ஊழலும் இல்லை என்று சித்தராமையா பொதுவெளியில் வாதிட்டார். கணவர் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 14 இழப்பீட்டுத் தளங்களை அவரது மனைவி திருப்பி அளித்துள்ளார். மேலும், ஒற்றை நீதிபதி உத்தரவை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை டிவிஷன் பெஞ்ச் மார்ச் 22-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.