அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே என்ற இடத்தில் கடந்த வாரம் டிசம்பர் 9-ம் தேதி அதிகாலை சீனப் படைகள் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (ஏல்.ஏ.சி) தாண்டி அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்தியா முறியடித்து, சீன வீரர்கள் திரும்பிச் சென்றனர் என நாடாளுமன்றத்தில் இன்று (டிசம்பர் 13) பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும், சண்டையின் போது இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டது எனத் தெரிவித்தார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் இன்று பேசிய ராஜ்நாத் சிங் கூறுகையில், நம் தரப்பில் கடுமையான பாதிப்புகள் ஏற்படவில்லை. உயிர்சேதம் ஏற்படவில்லை. இந்திய வீரர்களின் சரியான தாக்குதலால் சீன வீரர்கள் திரும்பிச் சென்றனர் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்த பிறகு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இது குறித்து விவாதம் கோரினர். அவை தலைவர் அனுமதி மறுத்ததையடுத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), சமாஜ்வாதி கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், " டிசம்பர் 9 அன்று சீன ராணுவம் தவாங் செக்டரின் யாங்ட்சே பகுதியில் எல்லை கோட்டைத் தாண்டி அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றனர். சீனாவின் முயற்சியை இந்திய வீரர்கள் உறுதியான முறையில் தடுத்தது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இந்திய ராணுவம் திறம்பட எதிர்கொண்டது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை தடுத்தது. சீனாவின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நம் தரப்பில் பெரிய அளவிலான பாதிப்புகள், உயிர்சேதம் ஏற்படவில்லை.
இந்திய வீரர்கள் சரியான நேரத்தில் மேற்கொண்ட தலையீடு காரணமாக சீனா ராணுவம் திரும்பிச் சென்றது. இதைத்தொடர்ந்து, அப்பகுதி இந்திய ராணுவத் தளபதி டிசம்பர் 11 அன்று இப்பிரச்சினையை விவாதிக்க சீனாவுடன்
கொடி கூட்டத்தை நடத்தினார். எல்லையில் பாதுகாப்பு, அமைதியை நிலை நாட்ட இதுபோன்ற செயல்களில் இருந்து விலகுமாறு சீனாவிடம் தெரிவிக்கப்பட்டது" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அமளிக்குப் பிறகு நாடாளுமன்றம் 1 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. சபை கூடியபோது இந்த விவகாரம் குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "சீனாவின் அத்துமீறல்கள் மற்றும் சீனாவின் நிரந்தரக் கட்டமைப்புகள் குறித்து மத்திய அரசு வாய்திறக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். “அரசாங்கம் வாய்மூடி இருப்பதால் நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு சீன அத்துமீறல்களால் பாதிக்கப்படுகிறது” என்று கார்கே கூறினார்.
“லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நமது ராணுவத்தின் வீரம் அனைவரும் அறிந்தது. ஏப்ரல் 2020 முதல் சீனா துணிச்சலுடன் நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருகிறது. டெப்சாங் சமவெளியில் Y சந்திப்பு வரையிலான பகுதிகளில் சீன அத்துமீறல்கள் இன்றுவரை தொடர்கின்றன. கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலும் சீன அத்துமீறல்களின் நிலை தொடர்கிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil