புதுவை மக்கள் இலவச அரிசி பெற சான்றிதழ் பெற வேண்டும்: கிரண்பேடி அதிரடி உத்தரவு!

முதல்வர் நாராயணசாமி தற்போது வரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை

புதுவையில் உள்ள ஏழை எளிய மக்கள், சுத்தமான கிராமம் என்ற  சான்றிதழ் பெற்றால்  மட்டுமே இலவச அரிசி பெற முடியும் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி  துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றே நாளிலிருந்து தற்போது வரை ஏகப்பட்ட சர்ச்சைகள் அவரைச் சுற்றி வருகின்றன.  முதல்வருடன் கலந்தோசிக்காமல்  ஆளுநர் கிரண்பேடி தனியாக  செயல்படுவதாக ஏற்கனவே அவர் மீது  தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டன.   அதன் பின்பு முதல்வர் நாராயணசாமி மற்றும் கிரண்பேடிக்கு இடையே  பல்வேறு தருணங்களில் மோதல்கள் வெடித்தன.

அரசாங்க  விஷயத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது முதல்வர் நாராயணசாமி வெளிப்படையாகவே கிரண்பேடியை எச்சரித்தார்.  இவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளாத கிரண்பேடி தனியாக சென்று ஆய்வு நடத்துவது, புதுவையில் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையங்களை இரவில் சென்று சோதனை செய்வது, புதுவை மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிவது போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டார். மேலும்,  தூய்மைப் பணிகளையும் ஆங்காங்கே தொடங்கி வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், புதுச்சேரியை அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் துணைநிலை கிரண்பேடி சனிக்கிழமை (இன்று) ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வை முடித்த பின்பு தனது அலுவலகத்திற்கு சென்ற கிரண்பேடி அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார்.

இதன்படி, வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்தில் புதிய அறிவிப்பை அறிவித்துள்ளார். இனிவரும் காலங்களில், புதுவையை சுற்றியுள்ள கிராமங்கள் சுத்தமான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான், அந்த கிராம மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்றும், சான்றிதழ்பெறாத கிராம மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படாது என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்த புதிய அறிவிப்பு வரும்  ஜீன் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும்,  வரும் மே 31 ஆம்  தேதிக்குள் அந்தந்த பகுதி மக்கள்  தங்கள் இடங்களில் உள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை  சுத்தம் செய்ய வேண்டும் என்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   அதுவரை  ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிகள் பத்திரமாக பாதுகாக்கப்படும் என்று கிரண்பேடி கூறியுள்ளார்.

இதுக் குறித்து கிரண் பேடி கூறியதாவது, “ சுத்தமான கிராம் என்ற சான்றிதழ் பெற்ற கிராமங்களுக்கு மட்டுமே இலவச அரிசிகள் விநியோகிக்கப்படும். அத்துடன்,  சான்றிதழ்கள் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த  ஆய்வும் செய்யப்படும். கிராம பகுதியில் உள்ள மக்கள் தங்கள் இடங்களை சுத்தம் செய்ய  நான்கு வாரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பு காலம் மே 31 ம் தேதி முடிவடைகிறது.

கிராமப்புறங்களில் சுகாதாரத் துறை மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. இதை நினைத்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்தப்போதே கிராமப்புறங்களில் தூய்மை எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக் கூறியிருந்தேன். நீரில் கலக்கும் கழிவுகள், சுற்றுப்பகுதியிகளில் அளவுக்கு அதிகமான குப்பைகள், கழிவு நீர் தேங்குதல் போன்றவை பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது.” என்று தெரிவித்திருந்தார்.

கிரண்பேடியின் இந்த புதிய அறிவிப்பு பொதுமக்கள் மட்டும் அல்லாமல் அரசியல் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கிரண்பேடியின் இந்த அறிவிப்புக்கு முதல்வர் நாராயணசாமி தற்போது வரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close