வட மாநில வேலையாட்கள் நிலை : கேரளா கடந்த நூற்றாண்டில் சந்திக்காத அளவிற்கு பெரும் மழையையும் வெள்ளத்தினையும் சந்தித்துள்ளது. 14 மாவட்டங்களிலும் பெருத்த சேதாரம் கண்டிருக்கும் மாநிலம் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
வீடுகள், கிணறுகள், மின் நிலையங்கள், மின் இணைப்பு வசதிகள் என ஒவ்வொன்றாய் சீராகி வருகின்ற நிலையில், வெள்ளம் காரணமாக கட்டிட வேலை மற்றும் வர்த்தகங்கள் பெரும் அளவு பின்னடைவை சந்தித்துள்ளது.
To read this article in English
வேலையிழக்கும் அபாயத்தில் வட மாநில வேலையாட்கள்
கடந்த சில வருடங்களாக வெளிமாநிலத்தில் இருந்து வேலை தேடிக்கொண்டு தென்னிந்தியா வரும் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில் கேரளா கடுமையான பாதிப்புகளை சந்தித்தன் விளைவாக வேலைகள் ஏதுமின்றி தவித்து வந்தனர் வட மாநிலத்தவர்கள்.
வெள்ளம் வடியத் தொடங்கியப் பின்பு முகாம்களில் இருந்து வெளியேறும் வட மாநில வேலையாட்கள் வேலைகள் ஏதுமில்லாததால் மீண்டும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்கிறார்கள்.
இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, மீண்டும் கட்டிடம் மற்றும் வர்த்தக வேலைகளில் கேரளா முனைப்புடன் இறங்கும் போது நிச்சயம் இங்கு தான் திரும்பி வருவோம் என்று கூறியுள்ளனர்.
எர்ணாக்குளம் மாவட்டம் அலுவா பகுதியில் இருந்த முகாம்களில் 150 மேற்கு வங்கத்தினர் தங்கியிருந்தனர். பெரும்பவூர் மற்றும் கொத்தமங்களம் பகுதியிலும் நிறைய வட மாநில வேலையாட்கள் தங்கியிருந்தனர்.
கட்டிட வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் முன்னதாகவே தங்களின் சொந்த ஊர்களுக்கு திட்டமிட்டிருந்த தருணத்தில் மழை வெள்ளம் ஊருக்குள் வந்ததால் செல்ல இயலவில்லை.
இயல்பு நிலை திரும்பிய பின்னர் சில நாட்களாக தான் எங்களை எங்கள் முதலாளிகள் சந்தித்து சம்பள பாக்கியை தந்தார்கள் என்றும் கூறுகின்றனர் கேரளாவில் இருந்து சொந்த மாநிலம் செல்லும் வட இந்திய வேலையாட்கள்.
வட மாநில வேலையாட்கள் எங்கிருந்து வருகிறார்கள்?
கேரளத்தில் மட்டும் சுமார் லட்சக்கணக்கானவர்கள் வெளி மாநிலங்களான மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களில் இருந்தும் சிலர் வங்கம் மற்றும் நேபாளத்தில் இருந்தும் வந்து இங்கு தங்கி வேலை செய்து வருகிறார்கள். மழை வெள்ளம் ஏற்பட்டதால் அனைவரின் இயல்பு வாழ்வும் பாதிப்பிற்குள்ளானது.
இவர்களின் நிலை மற்றும் இருப்பு குறித்து இவர்களின் குடும்பத்தினருக்கு நிச்சயம் மனவருத்தம் இருக்கும். ஆகவே இச்சமயம் இவர்கள் வீடு திரும்புவது இயற்கையான ஒன்று. அவர்களுக்கு உதவும் விதமாக கடந்த நான்கு நாட்களாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.