இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை யாரும் எதிர்க்க முடியாது என்று தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்கு பிறகு லாவ்ரோவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்க விரும்பினால் அதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இந்திய வெளியுறவுக் கொள்கைகள் தனிப்பட்ட முறையில் உண்மையான தேசிய நலன்களில் கவனம் செலுத்துகின்றன.
இதேபோன்ற கொள்கையைதான் ரஷ்யாவில் நாங்கள் பின்பற்றி வருகிறோம். இதனால்தான் இந்தியாவும், ரஷ்யாவும் மிகப் பெரிய நாடாக இருக்கிறது.
இந்திய அரசுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பிலும் ரஷ்யா இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறது.
பல தசாப்தங்களாக நாங்கள் இருதரப்பு உறவை பேணி வருகிறோம். உத்தி சார்ந்த நல்லுறவை வளர்த்து வருகிறோம். இதன்மூலம், நாங்கள் அனைத்து தரப்பிலும் பரஸ்பரம் ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.
ரஷ்யா-உக்ரைன் பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா மத்தியஸ்தம் செய்யும். இந்தியா மிக முக்கியமான நாடு. சர்வதேச விவகாரத்தில் நியாமாக இந்தியா நடந்துகொண்டால், பிரச்சனைக்கு தீர்வு காண முடிந்தால் உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தராக இந்தியாவால் இருக்க முடியும்.
டாலரில் இருந்து தேசிய நாணயத்திற்கு மாறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. வரும் நாட்களில் அதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இதையும் படியுங்கள்: தான் ரஷ்யா சென்றதால் இந்தியாவை ஆதரிக்கும் சக்திவாய்ந்த நாடு பாகிஸ்தான் மீது கோபம் – இம்ரான் கான்
தேசிய நாணயங்களை பயன்படுத்தி இரு நாடுகளுக்கு இடையிலான பரிவர்த்தனை நடைபெறும் என்றார் லாவ்ரோவ்.
இதனிடையே, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியில் தீர்வு காண இந்தியா விரும்புகிறது என்றார்.
மற்ற நாடுகளை போல உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை இந்தியா இன்னும் விமர்சிக்கவில்லை.
ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திலும் இந்தியா வாக்களிக்கவில்லை.
அதேநேரம், ஐ.நா. அமைப்பில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்திலும் இந்தியா வாக்களிக்கவில்லை. இதையடுத்து, இந்தியா இந்தப் போர் விவகாரத்தில் நடுநிலை வகிப்பது உறுதியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 2, மார்ச் 7 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி போனில் பேசினார்.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெனஸ்கியுடனும் பிரதமர் மோடி இரண்டு முறை பேசினார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் நிலையான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை இந்தியா கடைபிடிக்கிறது. போர் நிறுத்தம் வர வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“