பொறியியல் படிப்பிற்கு மவுசு குறைந்ததா?.. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்!!!

கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் கலந்தாய்வு முடிந்து 90 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.

இந்தியாவில் பொறியியல் தொடர்பான படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் சில தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அனுமதி வழங்குமாறு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 6 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் பெருமளவில் குறைந்து  வருகிறது.  இதனால், ஆண்டுதோறும் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் அதிகரித்தன. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும்  கலந்தாய்வு முடிந்து 90 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.

ஒருசில தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிக மிகக்குறைவாக இருந்தது. இதனால், பொறியியல் கல்லூரிகளை கலை அறிவியல் கல்லூரிகளாகவும், பாலிடெக்னிக் கல்லூரிகளாகவும் மாற்றும் முடிவுக்கு பல கல்லூரி நிர்வாகங்கள் வந்தன.நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2012-13ஆம் கல்வியாண்டில் இருந்து, தற்போது வரை 1.36 லட்சம் அளவிற்கு சேர்க்கை குறைந்துள்ளது.

இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம்(AICTE) 200 இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. இந்த கல்லூரிகள் புதிய மாணவர்களின் சேர்க்கையையும் நிறுத்தியுள்ளன.அதே சமயத்தில்  ஐஐடி, என்.ஐ.டி போன்ற பிரபல தொழில்நுட்ப கல்லூரிகள் சேர்க்கையில் அதிக ஆர்வத்துடன் விண்ணப்பித்தும் வருகின்றனர்.

ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் கட்டுப்பாட்டில், 10 ஆயிரத்து 300 தொழில்நுட்ப கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில், ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும், அதிகபட்ச மாணவர்கள் சேர்க்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

இக்கல்லுாரிகளில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, 30 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகள் மூடப்பட்டு, 2018- – 19ம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை, நிறுத்தப்படும் என்ற செய்தியும் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த தகவலில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலிருந்து, மாணவர் சேர்க்கை, 50 சதவீதமாக குறைக்கப்படும் என்றும், பாடப்பிரிவு மூடப்படாது என்று ஏ.ஐ.சி.டி.இ தனது அதிகாரப்  பூர்வ இணையதள பக்கத்தில்  தெரிவித்திருந்தது.

வரும் 2022ஆம் ஆண்டிற்குள், தொழில்நுட்ப கல்லூரிகளில் உள்ள 50% படிப்புகளுக்கு தேசிய அங்கீகார வாரியத்திடம் (NBA) இருந்து, அங்கீகார சான்று பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது 10% படிப்புகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 75,000 இன்ஜினியரிங் சீட்டுகள் சேர்க்கையில் குறைந்து வருகின்றன.

அதாவது 2016-17ஆம் கல்வி ஆண்டில் ஒட்டுமொத்த இளங்கலையில் இருந்த 15,71,220 சீட்டுகளில், 7,87,127(50.1%) சீட்டுகளுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெற்றன.இதேபோல் 2015-16ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த இளங்கலையில் இருந்த 16,47,155 சீட்டுகளில், 8,60,357(52.2%) சீட்டுகளுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெற்றன.

அத்துடன்,  கல்லூரிகளை மூட அனுமதி  கேட்டு விண்ணப்பித்துள்ள கல்லூரி நிர்வாகங்கள்ளின் கோரிக்கை நியாமானதாக இருந்தால் அவை ஏற்கப்படும் என்றும்  ஏ.ஐ.சி.டி.இ  தெரிவித்துள்ளது  கல்லூரியில்  சேர்ந்த பின்பு மாணவர்கள் ஒழுங்காக கல்லூரிக்கு வரவில்லை என்றாலோ அல்லது,  வருகை கணக்கு குறைந்தாலோ அவர்களிடம் இருந்து அபராதம்  வசூலிக்கும் முறையை கையாளும் படி அறிவுறுத்தியுள்ளது.

×Close
×Close