Harikishan Sharma
உள்நாட்டு ஓபன் மார்க்கெட் விற்பனைத் திட்டத்தின் (OMSS-D) கீழ் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அரிசி விற்பனையை நிறுத்தி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த சந்தையில் தானியங்களை மின்-ஏலத்தில் விடுமாறு இந்திய உணவுக் கழகத்திடம் (FCI) மத்திய அரசு கேட்டுக் கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, கடந்த வாரம் விற்பனை அறிவிக்கப்பட்ட நிலையில் வாங்குவதற்கு அதிகமானோர் முன்வரவில்லை. மேலும் 3.86 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், 170 மெட்ரிக் டன்களுக்கு மட்டுமே FCI ஏலத்தை பெற்றுள்ளது.
ஜூலை 5 ஆம் தேதி நடந்த மின்-ஏலத்தில், 19 மாநிலங்கள் மற்றும் NEF (வடகிழக்கு எல்லை) பகுதியில் 3.86 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை விற்பனை செய்ய FCI முன்வந்தது, இதில் அதிகபட்சமாக 1.5 லட்சம் மெட்ரிக் டன்கள் பஞ்சாபிலும், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (49,000 மெட்ரிக் டன்) மற்றும் கர்நாடகாவிலும் (33,000 மெட்ரிக் டன்) விற்பனை செய்ய முன்வந்தது. ஆனால், மகாராஷ்டிரா (70 மெட்ரிக் டன்கள்), குஜராத் (50 மெட்ரிக் டன்கள்) மற்றும் கர்நாடகா (40 மெட்ரிக் டன்கள்) ஆகிய மூன்று மாநிலங்களிலும் மற்றும் NEF பிராந்தியத்திலும் (10 மெட்ரிக் டன்கள்) மட்டுமே FCI ஏலம் பெற்றது, என FCI ஏலத்தை நடத்தும் M ஜங்ஷன் சர்வீசஸ் லிமிடெட் இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களின்படி தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்: வெள்ளையில் இருந்து காவி நிறத்திற்கு மாறும் வந்தே பாரத் ரயில்கள்
மீதமுள்ள 16 மாநிலங்களான ஹிமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப், பீகார், ஜம்மு & காஷ்மீர், ஆந்திரா, ஒடிசா, நாகாலாந்து, டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விற்பனை நடைபெறவில்லை. இந்த ஏலத்தில், தனியார் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும், மாநில அரசுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கையிருப்பு விலையான ரூ.3,173க்கு எதிராக ஒரு குவிண்டால் அரிசியின் நிகர சராசரி விற்பனை விலை ரூ.3,175.35 ஆக இருந்தது.
மின்-ஏலத்தின் நிலை குறித்து அமைச்சகத்திடம் இருந்து பதில் கோரிய மின்னஞ்சலுக்கு பதிலளிக்கப்படவில்லை.
அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் அனைத்து வறுமைகோட்டிற்கு கீழ் (பி.பி.எல்) குடும்பங்களுக்கும் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 10 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்க கர்நாடக அரசு FCI இடம் 2.28 லட்சம் மெட்ரிக் டன்களை ஒரு மாதத்திற்கு முன்பே கோரியது. ஜூன் 12 தேதியிட்ட இரண்டு கடிதங்களில், FCI சுமார் 2.22 லட்சம் மெட்ரிக் டன்களை வழங்க ஒப்புக்கொண்டது.
ஒரு நாள் கழித்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தானியங்களை விற்க கூடாது என FCI க்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூன் 14 அன்று, கர்நாடகாவுக்கு அரிசி ஒதுக்கீடு செய்வதற்கான உத்தரவை FCI ரத்து செய்தது.
FCI தலைவரும் நிர்வாக இயக்குனருமான KK மீனா ஜூன் 23 அன்று, சந்தை தலையீட்டின் ஒரு பகுதியாக நிலவும் சில்லறை விலையில் உள்ள விலை உயர்வு போக்கை சரிபார்க்க கோதுமை மற்றும் அரிசியின் மின்-ஏலத்தை நடத்துமாறு FCI க்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 14 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உணவு அமைச்சகம், "விலைவாசி உயர்வு போக்குகள் கட்டுக்குள் வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும், மத்திய தொகுப்பில் போதுமான அளவு இருப்பு நிலைகளை உறுதி செய்வதற்காகவும், இந்த முறை மாநில அரசுகளின் திட்டத்தை OMSS(D) வரம்பிலிருந்து விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்தது.
நுகர்வோர் விவகாரத் துறை இணையதளத்தில் கிடைக்கும் தரவு, ஜூலை 8 அன்று ஒரு கிலோவுக்கு ரூ.40.15 ஆக இருந்த அரிசியின் அகில இந்திய தினசரி சராசரி சில்லறை விலை, ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.36.52ஐ விட 9.94 சதவீதம் அதிகம் என்பதைக் காட்டுகிறது. அகில இந்திய தினசரி சராசரி அரிசி மொத்த விற்பனை விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,522.54 ஆக பதிவாகியுள்ளது.
கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்கள் தங்கள் திட்டங்களுக்கு கூடுதல் அளவு அரிசி கோரத் தொடங்கினால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மிகவும் கடினமாகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தவிர, 2011-12 ஆம் ஆண்டின் NSSO கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி, மாநிலத்தின் கிராமப்புறங்களில் மாதாந்திர தனிநபர் அரிசி நுகர்வு 5.622 கிலோவாகவும், நகர்ப்புறங்களில் 5.213 கிலோவாகவும் உள்ளது. அகில இந்திய சராசரி மாதாந்திர நுகர்வு கிராமப்புறங்களில் 5.976 ஆகவும், நகர்ப்புறங்களில் 4.487 கிலோவாகவும் உள்ளது.
ஜூன் 13 க்கு முன், மாநிலங்கள் தங்கள் சொந்த திட்டங்களுக்காக ஒரு குவிண்டாலுக்கு (இந்தியா அளவில்) ரூ. 3,400 என்ற விகிதத்தில் FCI இலிருந்து அரிசி (செறிவூட்டப்பட்ட அரிசி உட்பட) வாங்க அனுமதிக்கப்பட்டன. மின் ஏலத்தில் பங்கேற்காமல் அரிசி கொள்முதல் செய்ய மாநிலங்கள் அனுமதிக்கப்பட்டன. 2023 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி வரை OMSS-ன் கீழ் மின்னணு ஏலத்தில் பங்கேற்காமல் 1.16 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை மாநிலங்கள் வாங்கியதாக FCI இணையதளத்தில் உள்ள தகவல் காட்டுகிறது, இதில் 97 சதவீதம் (1.12 மெட்ரிக் டன்) கர்நாடகாவால் மட்டுமே வாங்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil