Janardhan Koushik
ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் திராவிட பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் படிக்க யாரும் விண்ணப்பிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் தென்மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் ஒத்துழைப்புடன் திராவிட கலாச்சாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 1997ம் ஆண்டில் திராவிட பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் மூலம், முதுகலை, எம்.பில், முனைவர் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதுகலை தமிழ் படிக்க இதுவரை ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுதொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த திராவிட பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பு துறைத்தலைவர் டாக்டர் டி. விஷ்ணுகுமரன் கூறியதாவது, மாணவர்களிடம் இதுதொடர்பான விழிப்புணர்வு இல்லாததே, விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சரிவடைந்ததற்கான காரணம் என அவர் கூறினார்.
இந்தாண்டில், மாணவர்கள் யாரும் விண்ணப்பிக்காததற்கு அவர் இரண்டு காரணங்களை வகைப்படுத்தியுள்ளார்.
1. ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் தமிழ் சார்ந்த படிப்பிற்கு மதிப்பு இருக்குமா என்ற மாணவர்களின் சந்தேகம்.
2. தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள மாணவர்கள், இந்த படிப்பின் மதிப்பை அறிந்து இங்கு வந்து தங்கி படிக்கின்றனர். இந்த படிப்பின் மதிப்பை அறியாத மற்ற பகுதி மாணவர்கள், இங்கு வந்து தங்கி படிக்க தயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
திராவிட பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில், ஆண்டுதோறும் முதுகலை, எம்.பில் மற்றும் முனைவர் படிப்புகள் என 20 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைகழகத்தில் படித்த பல்வேறு மாணவர்கள், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயர்பதவிகளில் உள்ளனர். இங்கு படிக்கும் மாணவர்களின் வசதிக்காக, தமிழக அரசு சார்பில் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் உயர்தர செயற்திறன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு படிக்கும் மாணவர்களின் கல்விச்செலவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் முழுத்தொகையையும் தமிழக அரசே வழங்குகிறது.
மாணவர் சேர்க்கை சரிவடைந்துள்ளதால், மாணவர் சேர்க்கையின் கடைசி தேதியை, இந்த மாதம் இறுதிவரை நீட்டித்துள்ளோம். கடந்தாண்டு, ஜூன் இறுதியிலேயே, மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டோம். திராவிட பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத பிற்பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படிப்புகளின் மதிப்பை மாணவர்களுக்கு உணர்த்தவும், பணி பாதுகாப்பு குறித்த அம்சங்களை விளக்கவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
அடுத்தாண்டு முதல் ஓராண்டு பட்டய படிப்பை, தமிழ்த்துறை துவங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
1997ம் ஆண்டில் திராவிட பல்கலைக்கழம் துவங்கப்பட்டிருந்தாலும், 2006ம் ஆண்டுமுதலே, அங்கு தமிழ்த்துறை துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.