தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதாக, ரைதா ஹிதரக்ஷனா சமிதியினர் கர்நாடகாவில் உள்ள மாண்டிய மாவட்டத்தில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் கேள்விக்கே இடம் இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள மாண்டியாவில் நேற்றைய தினத்தில், ரைதா ஹிதரக்ஷனா சமிதியினர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக முதல்வர் இந்த பகுதிக்கு வருவதால் காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில் “ எங்கள் மாநிலத்தில் வரட்சி ஏற்பட்டுள்ளதால் எங்கள் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் சிரமம் இருக்கிறது. இதில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பா.ஜ.க, கெ.டி.எஸ் தலைவர்கள் மனநிலை குழம்பிவிட்டது. அவர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.
தற்போது இருக்கும் சூழலில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை. பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தேவ கவுடா உள்ளிட்டோர் மேகதாது அணை அமைக்க அனுமதி பெற்றபிறகு காவிரி பற்றி பேச வேண்டும். தமிழக அரசின் எந்த அழுத்தத்திற்கும் நாங்கள் அடிபணியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“